பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



3. அவருக்கே



இறைவன் என்றும் இருக்கிறான். அவனுடைய அருளும் என்றும் இருக்கிறது. ஆனால் அந்த அருளைப் பெறுகிறவர்கள் மிகவும் அரியவர்களாகவே இருக்கிறார்கள்.

அருள் கிடக்கட்டும். உலக வாழ்க்கைக்கு இன்றியமையாதது பொருள். பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு” என்று திருவள்ளுவரும், "முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னால் முடியும்” என்று மாணிக்கவாசகரும் சொல்கிறார்கள். உலகத்தில் பொருள் இருக்கத்தான் இருக்கிறது. ஆனால் எல்லோரிடமும் இருக்கிறதா? உலகத்தில் ஏழைகளே பெரும்பாலோர். ஏன்?

இதற்குத் திருவள்ளுவர் ஒரு காரணம் சொல்கிறார். இப்போது வறுமையாளர்களாக இருப்பவர்கள் முற்பிறவியில் நல்ல காரியங்களைச் செய்யாதவர்கள்; பிறருக்கு நன்மை பயக்கும் தொண்டுகளைச் செய்யாதவர்கள். உலகத்தில் மிகுதியான பேர்கள் தம் நலத்தையே கருதி வாழ்கிறர்கள். 'தமக்கென வாழாப் பிறர்க்குரி யாளர்' ஆகத் தவம் செய்வதில்லை. அதன் விளைவாகவே அவர்கள் மறுபிறப்பில் ஏழைகளாகப் பிறக்கிறார்கள். இந்த நிலை மாறுவதில்லை: அதனால் எப்போதும் ஏழைகள் பெரும்பான்மையாளராக இருக்கிறார்களாம்.

"இலர்பலர் ஆகிய காரணம்; நோற்பார்
சிலர்; பலர் நோலா தவர்.”