பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48. இறைவனை அடையும் திரு


இறைவனை மனத்தில் எண்ணுவது எளிய காரியம் என்று கூறிய அம்மையாரை நாம் ஒன்று கேட்கிறோம். "அவனை நினைந்து வாழ்வது எளிது என்றால் அந்த எளிய காரியத்தை எல்லாரும் செய்யலாமே! மனம் உடையார் யாவருமே அந்த நிலையை அடையலாமே! ஆனால் உலகத்தில் அந்த எளிய காரியத்தைச் செய்பவர்கள் மிகக் குறைவாகத்தானே இருக்கிறார்கள்? அதிலிருந்து அவனை நினைப்பது எளிதன்று என்று சொல்லத்தோன்றுகிறதே! இந்தமுரண்பாட்டைத் தீர்த்தருள வேண்டும்" என்று விண்ணப்பித்துக் கொள்கிறோம்.

"என்போல்வார் சிந்தையினும் இங்குற்றான் காண்பார்க் கெளிது" என்று ஒரு பாட்டிலும், “எம்மானை உள்நினைந்த சிந்தையராய் வாழும் திறம் எளியதிதுவன்றே” என்று அடுத்த பாட்டிலும் சொன்னவர் காரைக்காலம்மையார். அப்படி வற்புறுத்திச் சொல்வதைக் கேட்டு நமக்கு ஐயம் எழுகிறது. "அத்தகைய சிந்தை, உலகில் பெரும்பாலோருக்கு இல்லாதது ஏன்?" என்று கேட்கத் தோன்றுகிறது

அம்மையார் அந்த முரண்பாட்டைத் தீர்க்க முற்படுகிறார். அவருடைய நெஞ்சே அவருக்கு இந்தக் கேள்வியைப் போடுகிறது. "நீங்கள் சொல்வது போல அவனை எளிதிலே பெற்றுவிட முடியுமா? நினைத்தால் வந்து விடுவானா?" என்று. கேட்கிறது.

அம்மையார் தம் நெஞ்சைப் பார்த்துச் சொல்கிறார், அது நம்முடைய ஐயத்தைப் போக்கப் பயன்படுகிறது. நாம் உண்மையை உணராத மடமையை உடையவர்களாக, பேதையர்களாக இருக்கிறோம். அதனால் இந்த ஐயம்