பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

316

எழுகிறது. நம்மைப் பார்த்து, மடம் உடையவர்களே, பேதையர்களே!” என்று விளிக்கலாம். அது பண்பாடு ஆகாது. ஆகவே, தம்முடைய நெஞ்சைப் பார்த்தே, “மட நெஞ்சே!” என்றும் “பேதாய்!” என்றும் விளித்துச் சொல்கிறார்.

இறைவன் அருள் வடிவாக இருக்கிறவன். அவனுடைய அருளே அம்பிகை. உலகத்தில் உள்ள உயிர்கள் தன்னை வணங்கித் தியானித்து அருள் பெறவேண்டும் என்ற திருவுள்ளம் கொண்டு அருவாய் விளங்கும் அவன் உருவம் கொண்டு வருகிறான். முதலில் மாதிருக்கும் பாதியனாக எழுந்தருளுகிறான்; சக்தனும் சக்தியும் இணைந்த அர்த்தநாரீசுவரனாகத் தோன்றுகிறான். அவனுடைய திருவடியை அடையும் வாழ்வைவிடச் சிறந்த வாழ்வு வேறு இல்லை. அந்தச் செல்வத்துக்கு இணையான செல்வம் ஏதும் இல்லை. அந்தச் செல்வத்தை, வளவாழ்வை, நாம் அடையவேண்டும்.

அழகிய நிறம் பொருந்திய கணணையுடையவள் அம்பிகை. அந்தக் கண்களுக்கு மாவடுவின் பிளப்பை உவமை சொல்வது வழக்கம். அவளைத் தன் பாகத்திலே கொண்டிருக்கிறான் எம்பெருமான். பெண் பாதியும் ஆண் பாதியுமாக இருக்கும் அவனுக்கு இரண்டு திருவடிகள். அவற்றை வணங்கவேண்டும்; சிந்திக்கவேண்டும்: இடைவிடாமல் தியானிக்கவேண்டும்; அடையவேண்டும். அதுவே பெரிய திரு; ஐசுவரியம்.

நிறத்த
இருவடிக்கண் ஏழைக்கு ஒருபாகம் ஈந்தான்
திருவடிக்கண் சேரும் திரு.

[நிறத்த - தமக்குரிய அழகிய நிறத்தை உடைய இருவடி. கண் - இரண்டு மாவடுவின் பிளவைப் போன்ற திருவிழிகளை உடைய ஏழைக்கு - பெண்ணுக்கு.]

இத்தகைய செல்வம் நம்மைத் தேடிக்கொண்டு, நாம் இருக்கும் இடத்தை வந்து அடையும் என்று, அம்மையார்