பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

317

முன்பு இறைவனைச் சிந்திக்கும் பேறு தானே வந்து அடையும் என்றெண்ணி நாம் மனம் போன போக்கெல்லாம் போய்க் கொண்டிருந்தால் அந்தத் திரு கிடைக்காது.

உலகத்தில் செல்வத்தைத் தேடிப் போய்ப் பெறுகிறார்கள். ‘திரை கடல் ஓடியும் திரவியம் தேடு’ என்று சொல்வார்கள். முயற்சி இல்லாதவர்களுக்குச் செல்வம் கிடைக்காது. “முயற்சி திருவினை ஆக்கும்; முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்” என்று திருக்குறள் சொல்கிறது. இந்தத் திருவை ஆக்குதற்கே முயற்சி வேண்டுமென்றால் இறைவனை அடையும் திரு எளிதில் கிடைக்குமா?

அந்தத் திரு எல்லாவற்றிலும் பெரிய திரு. உலகிலுள்ள செல்வத்துக்குக் கேடு உண்டு; ஆக்கம் உண்டு; வரவுண்டு. செலவுண்டு! லாபம் உண்டு; நஷ்டமுண்டு. ஆனால் இறைவன் திருவடிக்கட் சேரும் திருவுக்கு இவை இல்லை.

“கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்” என்று பெரிய புராணம் சொல்கிறது. மோட்சமும் வேண்டாம் என்று செம்மாந்திருக்கும் திரு அது.

“கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்;
ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்;
கூடும் அன்பினில் கும்பிட லேஅன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்”

என்று அந்தத் திருவையுடையவர்களின் வீரத்தைப் பற்றிச் சேக்கிழார் பேசுவார்.

நாம் எதை எதையோ விரும்பி, எதை எதையோ செய்து கொண்டும் எதை எதையோ நாடி ஓடிக்கொண்டும் இருந்தால், அந்தத் திரு தானே வந்து நம்மை அடையாது. தம் நெஞ்சை எங்கெங்கோ போகவிட்டுக் கொண்டிருந்தால் அந்தத் திரு நமக்குக் கிடைக்காது.