பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

318

அதைநாம் நாடிச் செல்ல வேண்டும். அதற்கென்று ஒரு தகுதி, திறம், உண்டு. அழுக்கு மூட்டையைச் சுமத்தின வண்டியிலே அழகு மலரை ஏற்ற முடியாது; உலகப்பற்றுக்களிலே உழலும் நெஞ்சில் இறைவன் திருவடி பதியாது.

ஊரவர்பால் பற்றும், உறவினர்பால் பாசமும், உடைமைகளின்பால் பிணைப்பும் உடைய பெண் ஒருத்தி தன் இல்லத்தில் வளைய வருகிறாள். அறுபது நாழிகையும் வீட்டில் உள்ளவர்களோடு பழகிப் பொழுது கழிக்கிறாள். அவளுக்கு இன்னும் பருவம் வரவில்லை ஆதலால் மற்றப் பெண்களோடு விளையாடுகிறாள்; விளையாட்டுப் பொம்மைகளைச் சேர்த்து - வைக்கிறாள்: பாதுகாக்கிறாள்.

அவள் பருவம் அடைகிறாள். மணப் பருவம் வந்து விட்டது. அவளுக்கு ஏற்ற மணாளன் அவளைத் தேடி வர வில்லை. அவள் இருக்கும் சூழ்நிலை அமுக்கு நிரம்பியது. அவள் ஒரு கட்டழகனப் பற்றிக் கேள்வியுறுகிறாள். மிகவும் அழகுடையவன், ஆற்றலுடையவன், சிறந்த தலைமையுடையவன், கருணையுடையவன் என்று தெரிந்து கொள்கிறாள். அவனை அடைய வேண்டும் என்ற ஆசை முகிழ்க்கிறது. அவன் இருக்கும் நிலை எங்கே? இவள் இருக்கும் நிலை எங்கே? மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேற்றுமை போல அவர்களிடையே வேற்றுமை இருக்கிறது.

அவள் தாய். தந்தையர் தங்கள் உறவுப் பையன் ஒருவனுக்கு மணம் முடிக்க எண்ணுகிறார்கள். வறுமையில் வாடி நலியும் அந்தச் சூழ்நிலையில் அந்தப் பையன் எப்படி இருப்பான்? அழுக்குடையும் அவலட்சணத் திருமேனியும் சோம்பேறித்தனமும் உள்ள அவனை மணக்க அவளுக்குத் தோன்றுமா? அந்தச் சூழ்நிலையில் அவனைப் போன்ற வர்களே கிடைப்பார்கள்.

அவள் யாரைக் காதலிக்கிறாளோ அவன் அவளை நோக்கி வரமுடியாது. இந்த அழுக்கு நிலத்தில் அவன் எப்படி அடி எடுத்து வைப்பான்?