பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

319

அவளுக்கோ காதல் முறுகுகிறது. எப்படியாவது அவனை அடைந்து விடுவது என்று துணிந்து விட்டாள். அதற்குமுன் துணிய வேண்டியது ஒன்று உண்டு. தான் வளரும் சூழ்நிலையைத் துறக்க வேண்டும். தன் உறவினர்களைப் பிரிந்து ஓட வேண்டும். தன் தாய் தந்தையர்பால் உள்ள பாசத்தை அறுத்தெறிந்து அவர்களையும் உதறிவிட்டுச் செல்ல வேண்டும்.

அதற்குரிய துணிவு, திறம், தகுதி அவளுக்கு உண்டாக வேண்டும். இல்லையானால் எவ்வளவுதான் இருந்த இடத்திலிருந்தபடியே மறுகினாலும் அவள் ஏங்கி நிற்கிற வாழ்வு கிடைக்காது. தண்ணீருக்குள் இருந்து கொண்டு அங்கே தீயை மூட்ட முடியுமா? சாக்கடைக்குள் அழுந்தியபடியே அழுக்குப் படாத ஆடையை அணிய முடியுமா?

ஆகவே இந்த இடத்தைவிட்டு ஓடவேண்டும். அவன் வருவதற்கேற்ற சூழ்நிலை இங்கே இல்லை. அவன் உள்ள இடத்துக்குச் சென்று தான் அவனை அடையவேண்டும்.

“முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்;
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்;
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்;
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்.
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்;
அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தை;
தன்னை மறந்தாள்; தன் நாமம் கெட்டாள்;
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே!”

என்ற திருத்தாண்டகத்தில் இறைவனிடம் காதல் கொண்ட நங்கையைப் பாடுகிறார் அப்பர். பாட்டில் முற்பாதி அவளுடைய காதல் வளர்ச்சியைச் சொல்கிறது. இறைவனுடைய நாமத்தையும் வண்ணத்தையும் கேட்கிறாள்; அவன் இருக்கும் இடம் ஆரூர் என்பதை உணர்கிறாள். அந்த ஊர் நெடுந்