பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

324

பாம்பு மேலும் கீழும் அசைந்து மாறி மாறிப் பார்க்கிறதை அவர் நன்றாகப் பார்க்கிறார்.

சந்திரனைப் பாம்பு கவ்வும், விழுங்கும் என்று சொல்வது ஒரு மரபு. சந்திர கிரகணத்துக்கு விஞ்ஞானம் ஒரு காரணம் சொல்லும். அதை யார் கவனிக்கிருர்கள்? சந்திரனை இராகு என்ற பாம்பு விழுங்குகிறது என்றுதான் பலகாலமாக ஒரு கற்பனையை வளர்த்து அனுபவித்து வருகிறோம். அதுமட்டுமல்ல. சந்திரனுக்கும் பாம்புக்கும் விரோதம் என்று மேலும் அந்தக் கற்பனையைப் படர விட்டுப் புலவர்கள் பல பல வருணனைகளைச் சொல்லியிருக்கிறார்கள். காரைக்காலம்மையாரும் கவிபாடும் புலமையை உடையவரே அல்லவா? அதனால்தான் அவருக்குப் பல பல கற்பனைகள் எழுகின்றன.

‘பாம்புக்கு மதி பகை ஆயிற்றே; பாம்பு சந்திரன விழுங்கி விடுமே! இறைவன் கழுத்தில் உள்ள இந்தப் பாம்பு நினைத்தால் ஒருதாவு தாவி முடிமேல் உள்ள சந்திரனை லபக்கென்று விழுங்கி விடலாமே! ஏன் விழுங்கவில்லை?’

ஒரு காரணம் தோன்றுகிறது. இறைவனிடம் அடைக்கலம் புகுந்தவன் சந்திரன். அவனைப் பாதுகாப்பதாக இறைவன் உறுதி மொழி அளித்திருக்கிறான். தக்கனுக்குப் பயந்து இறைவனைச் சரணடைந்தான் சந்திரன். அதனால் இறைவன் அவனைத் தலையின் மேல் தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறான். ஆகவே, சந்திரன். இப்போது இறைவனுக்குப் பிரியமானவன். அவனுக்கு வரும் ஆபத்தினின்றும் அவனைக் காத்தவன், இப்போது அவனை இந்தப் பாம்பு விழுங்க முற்பட்டால் அதைப் பார்த்துக் கொண்டிருப்பானா? தக்கனுடைய தண்டனைக்கு அஞ்சி வந்த சந்திரனைக் காப்பாற்றின இறைவன், அவனைப் பாம்புக்கு இரையாகும்படி விட்டு விடுவானா? கிளியை வளர்த்துப் பூனைக்கா இரையாக்குவது? இதை அறிந்து அஞ்சியே அந்தப் பாம்பு சந்திரன் விழுங்கவில்லையோ?