பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

325

அப்படியானால் அது இருந்த இடத்திலே சும்மா இருக்கலாமே! அது எதற்காகச் சந்திரன் உள்ள முடியை, ஏற இறங்கப் பார்க்கிறதே! எப்போது இறைவன் கவனிக்காமல் இருப்பானோ, அப்போது பார்த்து விழுங்கலாம் என்று காத்திருக்கிறதோ?

அப்படி இராது. இறைவனைச்சார்ந்த பிறகு எவ்வளவு பொல்லாதவர்களானாலும் நல்லவர்களாகி விடுவார்கள். அறத்தின் வழி ஆட்சி நடத்தும் அரசர்களுடைய நாட்டில், ஒரு துறையில் மானும் புலியும் பகை உணர்ச்சியை மறந்து தண்ணிர் குடிக்கும் என்று சொல்வார்கள். அறமே வடிவமாக இருக்கும் ஆண்டவனிடம் .உள்ளவற்றிற்குப் பகை உணர்ச்சி இருக்குமா? ஆகவே ஆண்டவனுடைய ஆபரணமாக விளங்கும் பாம்பு இயல்பான பகை உணர்ச்சியை மறந்து, சந்திரன் தனக்கு உணவாவது என்பதையும் மறந்து சும்மா அசைந்தாடுகிறது.

இப்படிச் சொல்லலாம் போலத் தோன்றுகிறது. ஆனால் அந்தப் பாம்பு இறைவனுடைய மார்பையும் பார்க்கிறது; தலையையும் பார்க்கிறது. இறைவனை அடைந்த உயிர்கள் அமைதியான நிலையைப் பெறுவார்கள் என்று சாத்திரம் சொல்கிறது.

சிவபெருமான் சாந்தமே வடிவானவன். ‘சாந்தம் சிவம் சுந்தரம்’ என்று சுருதி பேசுகிறது. அவனைச் சார்ந்தவர்கள் யாவரும் கவலையற்றுச் சாந்தியான நிலையில் இருப்பார்கள். அப்படியிருக்க, இந்தப் பாம்பு மேலும் கீழும் தலையை எடுத்துப் பார்த்து ஆடுகிறதே! ஏன்?

இறைவன் திருமார்பை அம்மையார் கவனிக்கிறார். அங்கே வளைவாக வெள்ளை வெளேரென்று பன்றிக் கொம்பு தோன்றுகிறது. “முற்றல் ஆமை இளநாகமொடு ஏன முளைக் கொம்பு அவை பூண்டு” என்று திருஞான