பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

326

சம்பந்தர் பாடியிருக்கிறார். அந்தக் கொம்பின் வளைந்த வடிவத்தைப் பார்த்துவிட்டு, மேலே இறைவன் திருமுடியின் மேல் உள்ள பிறைச் சந்திரனையும் பார்க்கிறார் அம்மையார். மீண்டும் மீண்டும் பார்க்கிறார், பிறைச் சந்திரனும் வளைந்த வெள்ளையான பன்றிக் கொம்பும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான தோற்றத்தை அளிக்கின்றன. இடத்தினால்தான் வேறுபாடு. சந்திரன் தலையில் இருக்கிறான்; பன்றிக்கொம்பு திருமார்பில் இருக்கிறது. இரண்டும் வடிவத்திலும் வண்ணத்திலும் ஒப்புமையுடையனவாக இருக்கின்றன.

அந்தப் பாம்பு கீழும் மேலும் பார்க்கிறதே! இந்த இரண்டையுமே பார்க்கிறதே! அதற்கும் இந்த இரண்டும் ஒரே மாதிரியான தோற்றத்தை அளிக்கின்றனவோ?

ஆம்; அப்படித்தான் இருக்க வேண்டும். தலைமேல் ஒரு சந்திரன், மார்பிலே ஒரு சந்திரன். இப்போது காரணம் தெரிகிறது. பாம்புக்கு ஒரு சந்தேகம் வந்து விட்டது. தலையின் மேலே உள்ள பிறையைப் பார்க்கிறது. உடனே மார்பில் உள்ள பன்றிக் கொம்பைப் பார்க்கிறது. இரண்டும் பிறைச்சந்திரனாகவே தோன்றுகின்றன. எது உண்மையான பிறை என்று தெரிந்து கொள்ள முடியவில்லை. நாம் கண்டு கொள்ளலாம். அது அறிவில்லாத பாம்பு. பாம்பாட்டி கைவிரல்களை மடக்கி ஆட்டும் போது அதுவும் ஒரு பாம்பு என்று எண்ணிப் பாம்பு ஆடுகிறதே, அந்தப் புத்திதானே இதற்கும் இருக்கும்?

இந்தப் பாம்பு சந்திரனை விழுங்கியிருக்கும்; விழுங்காமல் இருப்பதற்கு வேறு ஒரு காரணமும் இல்லை. அதன் முடடாள் தனந்தான்; மதியின்மைதான் காரணம். சந்திரனும் பன்றிக் கொம்பும் ஒரே மாதிரி இருக்கின்றமையால் எது சந்திரன் என்று அந்த மதியில்லாத அரவுக்குத் தெரியவில்லை. மதியில்லா அரவுக்கு மதி இது என்று தீர்மானமாக நிர்ணயம் செய்ய முடியவில்லை. அதனால் துணிந்து சந்திரனிடம் சென்று விழுங்கவில்லை.