பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

327

இன்னும் அதன் சந்தேகம் தீரவில்லை. மேலே உள்ளது சந்திரனா, அல்லது கீழே மார்பில் உள்ளதுதான் சந்திரனா என்று இன்னும் சந்தேகத்திலே அதன் மனம் ஊசலாடுகிறது. அதனால்தான் அந்த அரவு சந்திரனை விட்டு வைத்திருக்கிறது. இன்றளவும் மதியில்லாத அரவு, இது மதி என்று தேராததாகவே இருக்கிறது. தெரிந்திருந்தால் மதிதலையில் இராது.

இப்படியெல்லாம். எண்ணி ஒரு கற்பனையான காரணத்தைக் கண்டுபிடித்த அம்மையார் மதி ஒன்று இல்லாத அரவின் செயலைச் சொல்கிறார்.

திருமார்பில் ஏனச் செழுமருப்பைப் பார்க்கும்
பெருமான் பிறைக்கொழுந்தை நோக்கும்-ஒருநாள்
இதுமதி என்று ஒன்றாக இன்றளவும் தேரா
தது, மதிஒன்று இல்லா அரா.

[மதி ஒன்று இல்லா அரா- ஆராய்ந்து பார்க்கும் அறிவு சிறிதும் இல்லாத (சிவபெருமான் அணிந்திருக்கும்) பாம்பு. பெருமான் திருமார்பில்-இறைவன் அழகிய மார்பில் உள்ள, ஏனச் செழுமருப்பைப் பார்க்கும். (இது தான் சந்திரனோ என்று) பன்றியின் வளமான கொம்பைப் பார்க்கும்; பெருமான் பிறைக் கொழுந்தைப் பார்க்கும் இறைவன் (முடிமேல் அணிந்துள்ள) இளம்பிறையைப் பார்க்கும்; இன்றளவும்- இந்த நாள் வரைக்கு. ஒரு நாள்-ஏதேனும் ஒரு நாளில். இது மதி என்று- இதுதான் சந்திரன் என்று. ஒன்றாக-ஒரு முடிவாக, தேராதது தெரியாதது.

அரா பார்க்கும், நோக்கும், இன்றளவும் தேராதது என்று கூட்டி முடிக்க. பெருமான் என்ற சொல்லைத் திருமார்பில் என்பதற்கும் கூட்டுக. நடுநிலைத்தீவகம். ஏனம்-பன்றி, பிறைக்கொழுந்து-கொழுந்தாகிய பிறை: மிக இளைய பிறை. இன்றளவும் ஒரு நாளேனும் தேராதது, ஒருநாளும், ஒன்றும் இல்லா என்ற இடங்களில் உம்மை தொக்கது. ஒனறாக-ஒரு முடிவாக; ஒரு தலையாக, அரா, தேராதது ஒன்றும்-சிறிதும்.]

இது அற்புதத் திருவந்தாதியில் 48ஆவது பாடல்.