பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50. பொன்னும் வெள்ளியும்


காரைக்காலம்மையார் இன்னும் கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார். மதி ஒன்று இல்லா அரவு இறைவன் திருமுடியில் உள்ள மதியையும் திருமார்பில் உள்ள பன்றிக் கொம்பையும் மாறி மாறிப் பார்ப்பதாகவும், அது இன்னும் இதுதான் சந்திரனென்று முடிவு கட்ட முடியாமல் இருக்கிறதாகவும் ஒரு கற்பனையைக் கூறினார். மறுபடியும் அவருடைய கற்பனை விரிகிறது. இப்போது அவர் இறைவனுடைய திருமுடியைப் பார்க்கிறார்.

திருமுடியில் உள்ள சடை செந்நிறம் உடையதாக இருக்கிறது. அவனுக்குச் செஞ்சடையப்பன் என்பதே ஒரு பெயர் அல்லவா? அந்தச் சடைக்காட்டின் சந்திரன் இருக்கிறது. அதன் நிலாக்கதிர் சடையின் மேல் வீசுகிறது. ஒரே சிவப்பாக இருக்கும் சடாபாரத்தின் இடையிடையே நிலாக்கதிர்கள் தவழ்கின்றன. சடையின் பொன்றனிறத் தோற்றத்தினிடையே நிலாவின் வெள்ளிக்கதிர் விராவியிருக்கிறது.

இந்த இரண்டும் விராவியிருக்கும் தோற்றத்தை அம்மையார் உற்றுக் கவனிக்கிறார். சடை புரிபுரியாக இருக்கிறது, புரிசடை என்றே சொல்வார்கள். அந்தப் புரிகளின் இடையே நிலாக்கதிர்கள் வெள்ளை வெளேரென்று தோற்றம் அளிக்கின்றன.

கற்பனை செய்யும் மனநிலையில் உள்ள அம்மையார் இந்த விராவும் தோற்றத்தைப் பற்றி எண்ணுகிறார். எந்த விதமாக இந்த விராவும் காட்சியைக் கற்பனை செய்வது? உவமையாக எதையாவது சொல்லலாமா?