பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

329

இறைவனுடைய செம்மையான கேசத்தினிடையே நரைத்த கேசம் இருக்கிறதா? செம்மயிரும் நரைமயிரும் கலந்த காட்சி என்று சொல்லலாமா?

சே! இறைவன் சாவா மூவாப் பேராளன். மனிதர்களுக்குத்தான் நரை, திரை, முப்பு, இறப்பு எல்லாம் வரும். ஆதியும் அந்தமும் இல்லாத அவனுக்கு இந்தத் தளர்ச்சிகள் இல்லை. ஆகவே நரை அவனிடம் உண்டாக நியாயம் இல்லை. அதைச் சொன்னால் இறைவனை இகழ்வதாக அல்லவோ ஆகிவிடும்? பின் எதை உவமை சொல்லலாம்? இறைவன் திருமுடியில் உள்ள சடை செம்பொன்னைப் போலத் தோற்றுகிறது. ‘ஞான்ற குழற் சடைகள் பொன்வரைபோல் மின்னுவன’ (26) என்று அம்மையாரே முன்பு ஒரு பாட்டில் சொல்லியிருக்கிறார். ஆகவே, சடையின் புரிகளைப் பொன் புரிகளாக உவமை செய்வது பொருத்தமாக இருக்கும். சடையின் இடையிடையே விரவியிருக்கும நிலவுக்கதிர்களுக்கு எதை உவமை சொல்வது?

பொன்னோடு இணைந்த ஒன்றைச் சொன்னால் பொருத்தமாக இருக்கும், பொன்னும் வெள்ளியும் இனம் அல்லவா? ஆகவே இரண்டையும் உவமையாக்கலாம். சடை பொன்புரியானால் நிலாக்கதிர் வெள்ளிப்புரியாக இருக்கலாம். பொன்னும் வெள்ளியும் இணைந்த காட்சி என்று சொல்வதுதான் சரி என்று முடிவு கட்டினார்.

மறுபடியும் இறைவன் திருமுடியைப் பார்க்கிறார். சத்திரன் பிறையாக, அழகிய குழவித் திங்களாக இருக்கிறது; வளைந்து வில்லைப் போலஇருக்கிறது; வெள்ளித் தகட்டை அராவி வளைத்து வைத்தால் எப்படி இருக்குமோ அப்படித் தோற்றம் அளிக்கிறது.

அராவி வளைத்தனைய அம்குழவித் திங்கள்.

அதனுடைய கதிர்கள் எங்கும் பரந்து சடை முழுவதும் விராவிக் கலந்திருக்கின்றன; நீள நீளமாக ஒடிச் சடைப் புரிகளின் இடையிடையே விராவியிருக்கின்றன.