பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

பார்வை விரிகிறது. அவன் தண்டாயுதபாணியை நோக்கிப் போனால் ஊரே மறைந்து போகிறது. கொஞ்சம் கொஞ்சமாகப் படிகளும் மறைகின்றன. அவன் பின்புறத்தில்தானே அவை இருக்கின்றன? அவனுக்கு முன்னே உள்ள படிகளே தெரிகின்றன. விட்டுப் போனவை தெரிகிறதில்லை. மேலே போகப் பக்கத்தில் தோன்றிய காட்சிகள்கூடத் தெரிவதில்லை.

இப்போது கோவிலுக்குள் நுழைந்துவிட்டான். தண்டபாணியின் சந்நிதியில் அந்தப் பெருமானையே நோக்கிப் போகிறான். அங்கே நிற்கிறான், இப்போது அவன் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்தவனைப்போல நிற்கிறான். அவன் பார்வைக்கு முருகன் ஒருவனே தெரிகிறான். இதுகாறும் பழகின ஊரும் தெரியவில்லை. கடந்து வந்த படிகளும் தெரியவில்லை. இதுகாறும் காணாத ஆண்டவன் உருவந்தான் தெரிகிறது. அவனுடைய திருமுடி நன்றாகத் கெரிகிறது.

காரைக்காலம்மையார் இந்த உச்ச நிலையில் இருக்கிறார். படிகளையெல்லாம் கடந்து விட்டார். நேரே சிவபெருமானைப் பார்க்கிறார். வேறு யாரும் அவர் கண்ணிற் படவில்லை. அந்தப் பெருமானுடைய திருமுடி நன்றாகத் தெரிகிறது. அவர் சந்திர கண்டத்தை, நிலாத்துண்டைத் தலையிலே தரித்திருக்கிறார். பகுதியாகப் பகிர்ந்து போழ்ந்த மதிப்பிளவைத் தரித்திருக்கிறார். அவர் சடை, கொடிகள் ஒன்றனோடு ஒன்று பிணைந்தது போலப் பின்னியிருக்கிறது, ‘பின்னுசெஞ்சடை’ அல்லவா?

இப்போது அம்மையார்முன் சிவபெருமான்; சிவபெருமான் முன் அவர். அவர் ஆட்கொண்டார். இவர் ஆளப்பட்ட ஆளாகிவிட்டார். அவர்களேயன்றி மூன்றாவது பொருள் இல்லை.

இது வரையில் எதை எதையோ பார்த்த கண்களுக்குச் சிவபெருமான் ஒருவரே தெரிகிறார். இந்தப் பிறப்பிலே அவருக்கு ஆளாகிவிட்டமையால் இனி அந்த அடிமைச்