பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

333

பொருத்தமான உவமை எது என்றெல்லாம் அவர் தம் எண்ணங்களை ஓட விட்டார். பொன்னோடு வெள்ளிப் புரியை இணைத்து வைத்தது போல இருக்கிறது என்று பாடினார். இன்னும் உவமை தேடும் உள்ளநிலை அவருக்கு மாறவில்லை. அப்பனுக்கும் அம்மையினுடைய கூந்தலுக்கும் உவமையினால் முடிச்சுப் போடப் பார்க்கிறார்.

அம்பிகையின் கூந்தலைக் கவனிக்கிறார். இறைவன் பங்கில் ஒட்டி இணைந்த நிலையில் அவன் சடையும் அவள் கூந்தலும் அருகருகே இருக்கின்றன. அந்தச் சடையில் கொன்றை மலர் பளிச்சென்று தோன்றுகிறது. இந்த இணைப்புக்கு எதை உவமை சொல்வது?

மாதர் கூந்தலுக்குக் கொன்றைநெற்றை உவமை சொல்வதுண்டு. அது நீளமாகக் கறுப்பாக இருக்கும். காய் பசுமையாக இருக்கும். அது பழமாகி நெற்றானால் நல்ல கறுப்பாக மாறிவிடும். நீட்சியும் கருமையும் செறிவும் உடையதாக இருப்பதால் கொன்றைப் பழக்கொத்து அல்லது நெற்றுக்களின் கொத்தை மகளிர் கூந்தலுக்கு உவமையாக எடுத்துச் சொல்வார்கள் புலவர்கள்.

காரைக்கால் அம்மையாருக்கு இது நினைவுக்கு வருகிறது. இறைவன் சடைமேல் கொன்றை மலர்கள் இருக்கின்றன. அம்பிகையின் கருங்குழல் அருகே தோன்றுகிறது. மலரும் அதனருகே அந்த மலர்களிலிருந்து தோன்றிய பழக்கொத்தும் இருப்பது போல அவர் கண்டார். உவமை கிடைத்துவிட்டது.

இறைவன் சடையின்மேல் கொன்றை பூத்திருக்கிறது. முன்பு இருந்த மலர்கள் உதிர்ந்து காய்த்துப் பழமாகிக் கொத்தாக அருகே காட்சி தருகின்றன என்று சொல்லலாம் என்ற முடிவுக்கு வந்தார்.

அம்பிகையின் கரிய குழற்கற்றைகள் இறைவன் சடையின் மேலுள்ள அந்தக் கொன்றை மலரில் விளைந்த கனிகள் பக்கத்தில் தாழ்ந்து தொங்குவன போல உள்ளன.