பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

334

என்று பாடினார். கொன்றைப் பூவும் கொன்றைப் பழக்கொத்தும் இணைந்து இப்போது காட்சியளிக்கின்றனவாம்.

சடைமேல்அக் கொன்றை
தருகனிகள் போந்து
புடைமேவித் தாழ்ந்தனவே
போலும்—முடிமேல்
வலப்பால்அக் கோல
மதியைத்தான் பங்கின்
குலப்பாவை நீலக் குழல்.

[தன்னுடைய திருமுடியின் மேல் வலப் பக்கத்திலே அந்த அழகிய பிறையை வைத்த சிவபெருமானுடைய ஒரு பாதியில் எழுந்தருளியிருக்கும் உயர்குலப் பெண்ணாகிய உமாதேவியின் கருமையான கூந்தற் கற்றைகள், இறைவன் சடையின் மேல் சூடியிருக்கும் அந்தக் கொன்றை மலர்கள் முதிர்ந்து உண்டாக்கிய கனிகள் உருவாகி வந்து பக்கத்திலே சார்ந்து கீழே தொங்குவன போலத்தோன்றும்.

கனிகள் என்றது நெற்றுக் கொத்துக்களே. புடை - பக்கத்தில். தாழ்தல் - கீழே தொங்குதல்.கோலம் - அழகு. பாவை - பாவை போன்ற உமாதேவி; ஆகுபெயர். குலம் - உயர்வும் ஆம். குழல் - கூந்தற் கற்றைகள். நீலம் - கறுப்பு; ‘நீலநிறக் காக்கைதனைப் பேசுவிக்கலாமோ’ என்பது போலக் கருமையையும் நீலமாகச் சொல்லுதல் மரபு.

நீலக்குழல் தாழ்ந்தனவே போலும் என்று கூட்டுக.]

இது அற்புதத் திருவந்தாதியில் 50-ஆவது பாடல்.