பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/342

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52. அங்கே அழைத்துச் செல்லாதே!


அம்பிகையின் கருங்குழலுக்கு உவமை சொன்ன காரைச்காலம்மையார் இப்போது உமாதேவியை நன்றாகப் பார்க்கிறார். அந்தப் பெருமாட்டியின் கூந்தல் முதுகுப் பக்கத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது. நீளமும் அடர்த்தியும் பரப்பும் உடைய அக் கூந்தல் அன்னையின் முதுகு சிறிதாக, சிறுபுறமாகத் தோன்றுகிறது. அம்பிகை) எவ்வளவு அழகாக இருக்கிறாள்! கூந்தலழகை அனுபவித்த அம்மையார் அன்னையின் திருக்கரத்தைப் பார்க்கிறார். கைநிறைய வளை அணிந்திருக்கிறாள் அம்பிகை; கோல் வளையாளாக விளங்குகிறாள். அவளைத் தன் பாகத்திலே இறைவன் வைத்திருக்கிறான். அம்பிகை அவன் பங்கில் அமர்ந்திருப்பதனால் அவனுடைய தோற்றத்தில் அழகு மிகுகிறது. அவனைப் பார்ப்பதைவிட அவளைப் பார்ப்பதற்கே கண் ஒடுகிறது. அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி அவள்.

இத்தகைய அழகிய பெண்ணைத் தன் பங்கில் இறைவன் வைத்திருக்கிறான். அடியவர்களுக்குக் காட்சியளிக்கும்போது அம்மையுடன் வருகிறான். அந்தக் காட்சியைக் காண இனிக்கிறது. திருக்கோயில்களில் அவன் அன்னையோடு வீற்றிருப்பதும் அழகான கோலந்தான்.

அன்னையை விட்டுப் பிரியாமல் எப்போதும் இருப்பவன் இறைவன். எங்கே போனாலும் அவளோடு போகிறான். அதெல்லாம் சரிதான். ஆடவ்ர்கள் போகும் இடங்களுக்கெல்லாம் பெண்கள் போக முடியுமோ? ஆடவர்கள் துணிச்சல்காரர்கள். எங்கும் போவார்கள்.