பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

337

சுடுகாட்டில் எலும்பும் நிணமும் உள்ள சூழ்நிலையில் உள்ள பேய்களுக்கு அவள் அழகைப் பார்க்கும் கண் ஏது? பெண் என்றால் பிடித்து உலுக்க வேண்டும் என்றல்லவா பேய் விரும்பும்; அத்தகைய ஆபத்தான இடத்தில் பெண்ணை அழைத்துச் செல்லலாமா?

அவன்தான் அச்சம் இல்லாமல் காலில் அணிந்த கழல் ஜல் ஜல் என்று ஒலிக்கப் பேய்களுக்கு நடுவில் கூத்தாடுகிறான். உமாதேவிக்கு அந்த ஆட்டத்தைக் காட்ட வேண்டுமென்று அழைத்துச் செல்கிறானோ? அம்பிகை அதைப் பார்த்து நடுங்கமாட்டாளா? இந்த இறைவனுக்கு இது உசிதம் அன்று என்று தெரியவில்லையே! 'இனிமேல் இந்தப் பைத்தியக்காரச் செயலைச் செய்ய வேண்டாம்' என்று சொல்லிப் பார்க்கலாமா?

தன் பிள்ளை அநுசிதமான காரியம் ஒன்றைச் செய்ய, அதைக் கணட தாய், “அப்படிச் செய்யாதே அப்பா” என்று சொல்வது போலக் காரைக்கால் அம்மையார் இறைவனிடம் நெருங்கிச் சொல்கிறார்.

"நள்ளிரவில் சுடுகாட்டில் போயாடும் தீயில்தாண்டவம் ஆடுகிறாயே; அந்த இடத்துக்கு, கூந்தல் தாழும் சிறு முதுகையும்,திரட்சியான வளையையும் உடைய அம்பிகையை உன் பாகத்தில் அழகாக வைத்துக் கொண்டு போக வேண்டாம்' என்று கேட்டுக்கொள்கிறார். நீ தனியாகப் போய் எப்படியானாலும் கூத்தாடு; இவளை மட்டும் அழைத்துக்கொண்டு போகாதே’ என்று குறிப்பிடுகிறார்.

குழல்ஆர் சிறுபுறத்துக்
கோல்வளையைப் பாகத்து
எழிலாக வைத்துஏக
வேண்டா,—கழல்ஆர்ப்பப்
பேரிரவில் ஈமப்
பெருங்காட்டில் பேயோடும்
ஆரழல்வாய் நீஆடும் அங்கு.

நா.—22.