பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

338

[காலில் அணிந்த வீரகண்டை ஒலிக்க, பெரிய நள்ளிரவில் ஈமமாகிய பெரிய சுடுகாட்டில்,பேய்களோடும் வெப்பம் தாங்குவதற்கு அரிய நெருப்பில் நீ தாண்டவம் ஆடும் அவ்விடத்துக்கு, கூந்தல் தாழ்ந்திருக்கும் சிறிய முதுகையுடையவரும் திரட்சியான வளைகளை அணிந்தவருமாகிய உமாதேவியை உன் வாமபாகத்தில் அழகாக வைத்துச் கொண்டு போக வேண்டாம்.

குழல்-கூந்தல். புறம்-முதுகு. கோல்- திரட்சி; கோல் வளை-உமாதேவி: அன்மொழித் தொகை. கழல்-காலில் வீரர்கள் அணியும் ம்ணியோடு கூடிய அணிகலன். வீர கண்டை. பேரிரவு- நள்ளிரவு. ஈமமாகிய பெருங்காடு: ஈமம்-மயானம், ஆரழல்-அரிய நெருப்பு: தாங்குவதற்கரியது, நீ ஆடும் அங்குக் கோல்வளையை அழைத்து ஏக வேண்டா.]

இவ்வாறு இறைவனுக்கு அறிவுரை கூறுவனவாக உள்ள பாடல்களில் காரைக்காலம்மையாரின் தாய்த் தன்மை புலனாகிறது.

இது அற்புதத் திருவந்தாதியில் 51- ஆம் பாட்டு