பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53. எங்கும் முழு மதியம்


சிவபெருமானுடைய தோற்றத்தில் மற்ற மூர்த்திகளிடம் காணாத பல விசித்திரமான பொருள்களைக் காணலாம். அவனுடைய திருமேனி உறுப்புக்கள், அவன் அணிந்த ஆடை, மலர், அணிகலன்கள் எல்லாமே வேறு ஒருவரிடம் காணாத வகையில் இருக்கும். அவனுக்கு நெற்றியிலே கண் உண்டு. அந்தக் கண்ணும் குறுக்கே இருக்கும். அதனால் விருபாக்ஷன் என்ற திருநாமம் அவனுக்கு அமைந்தது. அவன் தலையில் செக்கச்செவேலென்ற சடை, அதுவும் அவனுக்கே உரிய இலக்கணம். அவன் கண்டம் கரியது; ஆலகால விடத்தை உண்டதனால் அமைந்த மாறுபாடு. இதுவும் அவனுக்கு உரிய அடையாளம்.

அவன் அரையில் உடுப்பது புலித் தோல்; மேலே போர்ப்பது யானைத் தோல், அவன் மாலையாக அணிவதோ எருக்கு, பூளை, தும்பை, கொன்றை. இவற்றை வேறுயாரும் அணிவதில்லை.

அவனுடைய அணிகலன்களோ பாம்பு, என்பு, தலை மாலை. அவன் பூசும் சார்ந்தம் நீறு இவைகளும் சிவபெருமானுக்கே உரிய தனி அடையாளங்கள்.

மற்றத் தேவர்கள் பொன்னடை புனையவும் சிறந்த மலர் மாலை அணியவும் பல அணிகலன்களைப் பூட்டிக் கொண்டு கருணைபாலித்துத் தான் யாரும் பயன்படுத்தாதவற்தை ஏற்றுக் கொண்டிருக்கிறான். தன்னுடைய குழந்தைகளுக்கு எல்லா வகையான உணவுகளையும் பரிமாறி விட்டுத் தான் எஞ்சியிருக்கும் தீய்ந்த அடிச் சோற்றை உண்ணும் தாயைப் போன்ற தியாகி அவன்.