பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

340

அவன் இந்தக் கோலத்தோடு இருப்பதே அவனுடைய உயர்வையும் கருணையையும் எடுத்துக்காட்டுவதாகப் பெரியோர்கள் கருதுவார்கள். உலகமெல்லாம் அழிந்தாலும் அழியாதவன் அவன். தேவர்கள் யாவரும் இறந்துபட்டாலும் சாவா மூவாப் பேராளன் அவன். எல்லாம் அழிந்த பிரளய காலத்தில் தேவர்களின் எலும்பை அணிந்து கொள்கிறான். பிரமனுடைய கபாலத்தை ஏந்துகிறான். மற்றத் தேவர்களுடைய கபால மாலைகளைத் தலையிலே தரித்திருக்கிறான். இவை அவனுடைய அழியாத் தன்மையை விளங்கும் அடையாளங்கள்; அவன் நித்தியன் என்பதைக் காட்டும் அறிகுறிகள்.

இறைவனுடைய வடிவம், அவன் திருவிளையாடல்கள் முதலிய யாவுமே குறியீடுகள் (Symbols). அவற்றினுாடே உண்மைக் கருத்துக்கள் மறைந்துள்ளன. அவற்றைத் தெரிந்து கொண்டாலன்றி அந்தக் கோலத்தின் பெருமையை நாம் உணர இயலாது. அறிவு நிலை உயர உயரக் குறியீடுகள் அதிகமாகும். அவை நுட்பமானவை. கணிதம், விஞ்ஞானம் ஆகியவற்றில் மேலே போகப் போகக் குறியீடுகளைக் காண்கிறோம். அவற்றைத் தெரிந்து கொள்ளாதவர்கள் அந்தத் துறைகளில் அறிவைப் பெற இயலாது.

மூன்றாவது வகுப்பில் பயிலும் பிள்ளைக்குக் கூட்டல் கழித்தல் கணக்குக் கற்றுக் கொடுக்கிறார்கள். கரும்பலகையில் 4—-22— என்று எழுதியிருக்கிறார்கள். முதல் வகுப்பில் படிக்கிறவன் அதை எப்படிப் படிப்பான்? நாலு ஒற்றை கோடு, இரண்டு இரட்டைக் கோடு, இரண்டு என்றே படிப்பான். அப்படிப் படிக்கும் படிதான் அந்தக் கணக்கு இருக்கிறது. அவன் ஒற்றைக் கோடு, இரட்டைக் கோடு என்பதைக் குறியீடுகள் என்று உணராதவன். ஆகையால் அப்படிப் படிக்கிறான். அவற்றைத் தெரிந்து கொண்ட மூன்றாவது வகுப்புப் பிள்ளையோ நாலில் இரண்டு போனால் மிச்சம் இரண்டு என்று படிப்பான்.