பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

342

அதை உணர்ந்திருப்பதால் அவற்றைச் கண்டு கண்டு பலவகையில் பாராட்டுகிறார். முரண்பாடு போலக் கேள்வி கேட்கிறார். உவமைகளை எடுத்தாளுகிறார். அவற்றின் உள்ளுறையை உணராமல் தோற்றத்தை மட்டும் கண்டால் அச்சம் அல்லவா தோன்றும்? இறைவன் தன் திருமுடியின் மேல் வெள்ளையான கபாலமாலையை அணிந்திருக்கிறான். அதைக் கண்டால், உண்மை தெரியாதவர்களுக்கு பயந்தான் உண்டாகும்.

அம்மையார் அந்தத் தலைமாலையைக் கண்டு கண்டு மகிழ்கிறார். அது பெருமானுடைய நித்தியத்துவத்தைக் காட்டுகிறது என்பதை அறிந்தவர் அவர். இப்போது அதை உற்றுக் கவனிக்கிறார்.

சிவபெருமானுடைய திருக்கோலங்களில் ஒன்று சங்கரநாராயண மூர்த்தம். இடப் பாதியில் திருமாலும் வலப் பாதியில் சிவபெருமானும் இணைந்துள்ள திருவுருவம் அது. இதை ஆழ்வாரும், 'பிறைதங்கு சடையானை வலத்தே வைத்து' என்று பாடியிருக்கிறார். திருமாலும் சிவபெருமானும் வேறு வேறல்லர் என்பதைக் காட்டும் திருவுருவம் இது. சங்கர நயினார் கோவிலில் இந்த மூர்த்தியின் சந்நிதி இருக்கிறது. மாலிருக்கும் பாதியனாக அங்கே இறைவன் எழுந்தருளியிருக்கிறான். கேசவார்த்த மூர்த்தி என்றும் இந்தப் பெருமானைச் சொல்வார்கள். இந்தக் கோலம் அம்மையாரின் நினைவுக்கு வருகிறது.

செங்கண் திருமாலைப் பங்குடையான்

சிவபெருமான் திருமுடிச்சடை சிவப்பானது. செஞ்சடை. அதனால் அவனுக்குச் செஞ்சடையப்பன் என்ற திருநாமம் வந்தது. திருப்பனந்தாளில் எழுந்தருளியிருக்கும் சிவபிரான் அந்த திருநாமத்தை உடையவன். அருண ஜடேசுவரன் என்று வடமொழியில் சொல்வார்கள்.