பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

343

அவனுடைய செஞ்சடையில் கபால மாலை இருக்கிறது. அதை வெண்டலை மாலை, தலை மாலை, சிரமாலை என்றும் சொல்வார்கள். பல கபாலங்களைக் கோத்தமாலை அது. எத்தனையோ பிரமர்கள் அழிய அழிய அவர்கள் கபாலங்களை மாலையாக அணிந்திருக்கிறான். அந்த மாலை வெள்ளையாக இருக்கிறது. சிவப்பான சடையில் வெளுப்பான அந்த மாலை பளிச்சென்று தெரிகிறது.

அந்தச் சிரமாலையைக் கண்டு களிக்கிறார் அம்மையார். அது சிவபெருமானுடைய சிறப்பை எடுத்து விளக்குகிறது. அது காட்சியளிக்கும் சீரைச் சிந்திக்கிறார். அதன் உட்கருத்தைச் சிந்திக்கவில்லை. கவியுள்ளத்தோடு அதைப் பார்க்கிறார். இந்த மாலைக்கு எதை உவமையாகச் சொல்லலாம் என்று எண்ணிப் பார்க்கிறார்.

இறைவனுடைய சடை சிவப்பாக இருக்கிறது. சூரியன் மறைந்த பிறகு தோன்றும் செக்கர் வானம்போல அந்தச் சடைப்பரப்பு காட்சி அளிக்கிறது.

செஞ்சடைமேல்வைத்த
சிரமாலை தோன்றுவதோர் சீர்.

எப்படி இருக்கிறது என்று உவமை கூற வந்த அம்மையாருக்கு அந்தச் செஞ்சடை செக்கர் அகல் வானம் என்று சொல்லத்தக்க பாங்கில் இருப்பதாகக் தோன்றுகிறது. இறைவன் சடையில் பிறையை வைத்திருக்கிறான். இந்தத் தலைமாலையிலுள்ள தலைகளோ உருண்டை உருண்டையாக இருக்கின்றன. இவற்றுக்கு எதை உவமை சொல்லலாம் என்று யோசிக்கிறார். ஒவ்வொரு தலையும் ஒவ்வொரு பூரண சந்திரனாக முழு மதியமாகத் தோன்றுகிறது என்று சொல்லலாமா? மிகவும் பொருத்தம். செக்கர் வானத்தில் முழுமதியம் தோன்றுவது இயற்கைதான். ஆனால் அந்த வானத்தில் ஒரு சந்திரன் தான் தோன்றுவான். இங்கே ஒன்றல்ல, இரண்டல்ல,