பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

348

வெள்ளமும் காட்சிஅளிக்கின்றன; கார்காலத்தை நினைப்பூட்டுகின்றன.

இறைவன் சடாபாரமே கார்காலத்தை நினைப்பூட்டிவிடுகிறது. அங்கேதானே கொன்றையையும் வெள்ளத்தையும் பாக்கிறோம்? ஆகவே அந்தச் சடைமுடியையே கார்ப் பருவத்தின் வடிவம் என்று சொல்லிவிட்டால் என்ன? உற்றுக் கவனித்தால் இந்த உண்மை புலப்படும். ஆம்! நிச்சயமாக இது செவ்வையாகக் கார்ப் பருவத்தின் தோற்றந்தான். அதனால்தான் அந்தப் பருவத்துக்கு உரிய அடையாளங்கள் இருக்கின்றன என்று எண்ணமிடுகிறார்; தம் கருத்தைச் சொல்லில் வடித்து விடுகிறார்.

“போர்ஆர்ந்த
நாண்பாம்பு கொண்டுஅசைத்த
நம்ஈசன் பொன்முடிதான்
காண்பார்க்குச் செவ்வேஓர் கார்”

என்று தம் கருத்தைச் சொல்லில் வடித்து விடுகிறார்.

தம் உள்ளத்தில் இறைவன் திருவுருவத்தைத் தியானித்துத் தியானித்து அதில் ஆழ்ந்து ஈடுபடுகிறவராதலின் அந்தத் திருமேனியில் உள்ள அங்கங்களை யெல்லாம் கண்டு கண்டு களிக்கிறார்; வர்ணிக்கிறார்; கற்பனையால் உவமை கூறுகிறார்; உருவகமாக்குகிறார். அவருக்கு இறைவனிடம் முறுகிய பக்தி இருப்பதால் அவருடைய அகக்கண்ணில் எப்போது வேண்டுமானாலும் இறைவனுடைய திருவுருவம் தோன்றுகிறது. சில சமயங்களில் ஏதேனும் ஓர் அங்கத்தில் மனத்தை நிறுத்தி அதிலேயே நின்று ஈடுபடுகிறார். திருவடியில் மனத்தை ஒடுக்கி இன்புறுவார். சிலகால் நீல கண்டத்தில் மனத்தைச் சலனமின்றி நிறுத்தி அதன் பெருமையிலே ஆழ்ந்து இன்புறுவார். திருமுடியிலே அகப் பார்வையைச் செலுத்துவார். இவை பக்தியால் விளைபவை. இவற்றோடு நிற்கிறாரா?