பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

349

அவருக்குத் தமிழ்க் கவிதை கைவந்த கலை. தம் அனுபவத்தையும் உணர்ச்சியையும் சொல்லிலே வடித்துத் தரும் ஆற்றல் அவருக்கு உண்டு. ஆதலால் தம் கற்பனைத் திறத்தைத் தூண்டிவிட்டு, அழகிய கவிதையில் தாம் காணும் காட்சிகளை ஓவியமாகக் காட்டுகிறார். இப்போது சடாபாரத்தைக் கார்காலத்தின் வடிவம் என்று கற்பனை செய்து பாடுகிறார்.

சீர்ஆர்த்த கொன்றை
மலர்தழைப்பச் சேண்உலவி
நீர்ஆர்ந்த பேரியாறு
நீத்தமாய்ப்—போர்ஆர்ந்த
நாண்பாம்பு கொண்டுஅசைத்த
நம்ஈசன் பொன்முடிதான்
காண்பார்க்குச் செவ்வேஓர் கார்.

[சிறப்பு நிரம்பிய கொன்றைப் பூவானது தளதள வென்று மலர்ந்து விளங்க, வானுலகத்தில் ஓடி நீர் நிரம்பிய பெரிய ஆறாகிய கங்கையானது வெள்ளமாக இங்கே தங்கியிருக்க, போர் செய்யும் இயல்பு நிறைந்த, கயிற்றைப் போன்ற பாம்பைக் கொண்டு கட்டிய நம் ஈசனாகிய சிவபெருமானுடைய பொன் நிறம் பெற்ற திருமுடிதான் காண்பவர்களுக்கு நன்றாக ஒரு கார்காலப் பருவத்தின் வடிவே ஆகும்.

ஆர்ந்த-நிரம்பிய. தழைப்ப-அடர்ந்து மலர. சேண்-வானுலகம். கங்கைக்கு வான்யாறு என்பது ஒரு பெயர். பேர்யாறு என்பது சந்தியில் பேரியாறு என்று வந்தது. நீத்தமாய்-ஓடிய நதி இங்கே தங்கியிருக்கும் வெள்ளமாகி; நீத்தமாக என்று திரித்துப் பொருள் கொள்ள வேண்டும். போர்-போர் செய்யும் பண்பு: