பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/362

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

356

அதோடு அந்தப் பெருமானுடைய நெற்றிக் கண்ணும் நினைவுக்கு வருகிறது. அது சிவபெருமானின் தனி அடையாளம். ஆகவே இந்த இரண்டையும் இணைத்துச் சிவபெருமானை விளிக்கிறார்.

கார் உருவக் கண்டத்து எம் கண்ணுதலே!

எம்பெருமானை ஒரு கேள்வி கேட்கத் தொடங்குகிறார். திருமாலும் சிவபெருமானும் இரண்டு பாதி சேர்ந்த ஒருவராக எங்கும் உலாவுகிறவர்கள். சிவனை எங்கே காண்போமோ அங்கே திருமாலும் இருப்பார். அவரை விட்டுச் சிவன் இல்லை; சிவனை விட்டு அவர் இல்லை.

ஓர் உருவாய் நின்னோடு உழிதருவான்

அவர் சிவபெருமானேடு ஒன்றி இருந்தாலும் அவர் உள்ள பாதி இது என்று நன்றாகத் தெரியும். வேறுபாடு தெரியாமல் இருந்தால் சிவபெருமான்தான் இருக்கிறான் என்று சொல்லத் தோன்றும். ஆனால், இருவர் வடிவிலும் வண்ணத்திலும் வேறுபாடு தெளிவாக இருக்கிறது. சிவன் செம்மேனியான். திருமால் கருமேனியுடையவர். நீரைக் கருப்பமாகக் கொண்டு, பெய்யும் நிலையில் இருக்கும் கருமுகில் வண்ணம் திருமாலின் வண்ணம். செம்மைக்கு அருகில் கருநிறம் இருந்தால் நன்றாக எடுத்துக் காட்டும். ஆகையால் சிவபெருமான் எங்கே வந்தாலும் அவனுடைய ஒரு பாதியில் ஒட்டியிணைந்து தம் நீலவண்ணத்தைக் காட்டிக்கொண்டு திருமாலும் வருவார்.

நீர்உருவ, மேகத்தால் செய்தனைய
மேனியான் நின்னுடைய பாகத்தான்

இப்படி ஒட்டி இணைந்து இனம் கண்டுகொள்ளும்படி இருக்கும் திருமால் சிவபெருமானைத் தேடிக் காணவில்லையாம்! அவர் எப்போதும் உடம்பில் ஒரு