பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/363

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

357

நின்னுடைய பாகத்தான் காணாமே பண்டு
எங்கு ஒளித்தாய்?

பாதியாய் ஒட்டிக் கிடக்கும்போது அவர் காணாமல் எப்படி ஒளிக்க முடியும்? எங்கே ஒளிக்க முடியும்?

திருமால் வராக உருவெடுத்துச் சிவபிரானைத் தேடினார் என்று புராணம் சொல்கிறதே! அப்படித் தேடும்படி இறைவன் எங்கே ஒளித்தான்? இது மாய விளையாட்டுப் போலத் தோன்றுகிறதே! அம்மையார் இறைவனிடமே கேட்கிறார்.

இரட்டைப் பிள்ளைகளாக இருக்கும் இருவர் எப்போதும் இணைபிரியாமல் இருக்கிறார்கள். யார் கண்டாலும் இரண்டு பேரையும் காணுகிறார்கள், என்றாலும் ஒருவர் நோய்வாய்ப்பட்டு வீட்டில் படுத்திருந்தால் மற்றொருவரே வெளியிலே வர முடியும். அப்போது ஒருவரையே காணுவார்கள். உடம்பு வெவ்வேறாக இருப்பதனால் இது சாத்தியமாகிறது.

ஆனால் இரண்டு பாதியாக ஒட்டிய ஒரே திருமேனியில் ஒரு பாதி எப்படித் தனியாக ஒடி ஒளிக்கும்? திருமால் ஒரு பாதியென்று சொல்கிறவர்கள் அவர் காணாமல் சிவபிரான் ஒளித்தான் என்றால் முரண்பாடு அல்லவா? "உன்னோடு பாதியாக ஒட்டி நிற்பவன் பார்க்க முடியாமல் நீ எங்கே ஒளித்தாய்?" என்று அம்மையார் கேட்கிறார்.

கார் உருவக் கண்டத்துஎம்
கண்ணுதலே, எங்கு ஒளித்தாய்?
ஓர் உருவாய் நின்னோடு
உழிதருவான்—நீர் உருவ
மேகத்தால் செய்தனைய
மேனியான் நின்னுடைய
பாகத்தான் காணாமே பண்டு?