பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/364

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

358

[மேகத்தைப் போன்ற நிறத்தையுடைய திருக்கழுத்தையும் நெற்றியிலே கண்ணையும் உடைய எம்பெருமானே, ஒரே வடிவமாக நின்னோடு எங்கும் உலவுகிறவனும், நீரையுடைய அழகிய மேகத்தினால் செய்தமைத்தால் போன்ற திருமேனியை உடையவனும், நின்னுடைய இடப்பாதியில் இணைந்திருப்பவனுமாகிய திருமால் பழங்காலத்தில் எங்கே நின்னைக் காண முடியாமல் நீ மறைந்தாய்?

கார் உருவம் - மேகத்தின் நிறம். எம்—எமக்கு உரிமையுள்ள. உழிதருவான்—திரிபவன். உருவ மேகம்——அழகையுள்ள மேகம்; உருவம்— அழகு. செய்தாயலனை என்றது செய்தனைய என நின்றது. பாகம் என்றது இடப்பாகத்தை. பண்டு—இறைவன் சுடருருவனாக நின்ற பழங்காலத்தில்]

ஒட்டி இணைந்த உருவமுடையவனாக இருந்தவன் காணாதபடி ஒளித்தது பொருத்தமற்றது போலத் தோன்றும். இறைவன் பல வகை வடிவங்களை எடுத்தாலும் வடிவம் இல்லாமல் இருந்தாலும் அவை அவனுடைய திருவிளையாடல்களின் வகை. அவை ஒன்றுக்கு ஒன்று முரண்பாடாகத் தோன்றினாலும், அப்படி வெவ்வேறு வகையில் தோன்றுவது உயிர்க் கூட்டங்களுக்குக் கருணை வழங்குவதற்காகச் செய்யும் அருள் திருவிளையாடல் என்று கொள்ள வேண்டும். அந்த அந்தச் சந்தர்ப்பத்துக்கு ஏற்றபடி அவன் உருவெடுக்கிறான். அதற்கு எல்லை இல்லை.

இது அற்புதத் திருவந்தாதியில் 54—ஆவது பாடல்