பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/365

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56. வேறு ஒன்றும் உண்டு



குழந்தை தெருவில் கீழே விமுந்துவிட்டது. முழங்காலில் காயம். தாய் பதறிப்போய் விட்டாள். நல்ல வேளையாக அந்தக் காயம் சீக்கிரம் ஆறிவிட்டது. பொறுக்குத் தட்டியது. பிறகு அதுவும் உதிர்ந்துவிட்டது. அங்கே சிறிது மங்கலான வடு மாத்திரம் இருக்கிறது. அதைக் காணும்போதெல்லாம் அன்னைக்குக் குழந்தை கீழே விழுந்து காயம் பட்டது நினைவுக்கு வரும்.

ஒரு நாள் குழந்தைக்கு அவள் நீராட்டினாள். முதுகிலே ஒரு சிறிய தேமல். அதைக் கண்டபோது அவளுக்குத் துணுக்கென்றது. “ஓ! இதைக் கவனிக்காமல் இருந்துவிட்டேனே! குழந்தை விழுந்தபோது இங்கேயும் காயம் பட்டிருக்கிறது. அதனால்தான் இந்த வடு இருக்கிறது” என்று புலம்பினள்.

கீழே விழுந்த குழந்தை குப்புற விழுந்தபோது முழங்காலிலே காயம்படுவது இயற்கை. முதுகிலே எப்படிக் காயம் உண்டாகும்? இதைப்பற்றித் தாய் யோசிக்கவில்லை. குழந்தையின்பால் உள்ள அன்பு எதுவானாலும் அதற்கு வந்த தீங்கு என்று அச்சம் அடையச் செய்கிறது. காரண காரியங்களை ஆராய்ந்து முடிவு கட்டும் அறிவு அப்போது அவளுக்கு உதவுவதில்லை. அன்பின் இயல்பே அதுதான். எடுத்ததற்கெல்லாம் ஐயமும் துன்பமும் உண்டாவதற்கு அந்த அன்பே காரணம். குழந்தை உள்ளே படுத்து உறங்கும். வீதியிலே யாருடைய குழந்தை விழுந்துவிட்டது என்று கேள்விப் பட்டால், ‘நம் குழந்தைதானோ?’ என்று ஓடிப் போய்