பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/366

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

360

பார்த்து விட்டுப் பிறகு உள்ளே சென்று உறங்கும் குழந்தையைப் பார்த்து ஆறுதல் பெறுவது போன்ற விசித்திர நிகழ்ச்சிகள் அன்பின் விளைவாக உண்டாகும்.

காரைக்காலம்மையார் சிவபெருமானுக்குத் தாய் நிலையில் இருப்பவர். இறைவனுடைய எழிலையும் வீரத்தையும் பாராட்டும் தாயாக இருப்பார். ஐயையோ! இப்படி ஆகிவிட்டதே! என்று அங்கலாய்க்கும் அன்னையாகவும் இருப்பார். ‘இப்படியெல்லாம் செய்யப்படாது’ என்று அறிவுரை கூறும் மாதாவாகவும் இருப்பார். பக்தியுணர்ச்சி இன்னவாறுதான் செயற்படும் என்ற வரையறை இல்லை. இறைவனைப் பரதெய்வமாகவும் பரோபகாரியாகவும் போற்றும் நிலையும் காரைக்காலம்மையாரிடம் உண்டு. அப்போதெல்லாம் மற்ற அருளாளர்கள் எப்படிப் பேசுகிறார்களோ அப்படிப் பேசுவார்.

மனத்தில் மூண்டெழும் உணர்ச்சிகள் பலப்பல. மூலமாகிய குண்ம் எதுவோ அதன் விளைவாகப் பல்வேறு நிலைகளில் மனம் எண்ணமிடும். காதலியிடம் காதல் கொண்ட ஆடவன் அந்தக் காதல் காரணமாக, எத்தனையோ மனநிலைகளைப் (Moods) பெறுகிறான். சினம் கொண்டவன் உள்ளமும் அப்படியே வெவ்வேறு நிலைகளை அடைகிறது. கடலில் அலைகள் பல வகையாகக் கொந்தளித்து எழுந்தும் விழுந்தும் கரையை மோதியும் செயற்படுவது போல மனத்திலும் பல பல நிலைகளும் அந்த அந்த நிலைகளுக்கேற்ற எண்ண அலைகளும் தோன்றும்.

காரைக்காலம்மையாரின் திருவுள்ளத்திலும் இத்தகைய நிலைகளும் அலைகளும் எழும்புகின்றன. நாம் இதுவரையில் பார்த்த பாடல்களில் அப்படி உள்ள பல்வேறு நிலைகளைப் பார்த்து வருகிறோம். இப்போது தாயின் நிலையிலிருந்து பாடுகிறார். முதுகிலே உள்ள சிறிய