பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/369

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

363

கண்ணுக்கு முழுமதியமாகவே தோன்றுகிறது. பிறையாக இருந்தால் சந்திரனுக்கு வடு—அதாவது முயற்கறை இருப்பதில்லை. முழுமதியில்தான் இருக்கும்.

அம்மையார் கண்ணுக்குப் பால் போன்ற முழுமதி தோன்றுகிறது. அதனூடே வடுவும் கறுப்பாகத் தோன்றுகிறது. நீலமணி போன்ற அந்த மறு கண்ணிலே பட்டவுடனே ஒரு புதிய எண்ணம் உதிக்கிறது. இது மதியின் மறு அன்று; இறைவன் உண்ட நஞ்சினால் உண்டான வடு இது. அடடா திருக்கழுத்தில் மட்டுந்தான் கறை உண்டு என்று எண்ணியிருந்தேனே! விஷம் தலைக்கு ஏறித் தலைக்கு மேல் தலையிலணிந்த மதிக்கும் ஏறி அந்த மதியில் மறுப்போல இருக்கிறது. இதுவரைக்கும் திருக்கழுத்திலுள்ளது மட்டுந்தான் கறை என்று எண்ணியது தவறு. இதோ மற்றொரு வடுவும் உண்டு. மதியிலே மறுவைப் போல் அந்த விடந்தான் இங்கும் தோன்றுகிறது என்று தாயின் நிலையில் இருந்த அம்மையாரின் உள்ளத்தில் ஒரு புதிய அலை ஒடுகிறது. கவித்திறமை உள்ளவர்களின் எண்ண அலைகள் கவி வடிவத்தில் வெளிப்படும் அல்லவா? இறைவனிடம் தாயன்பும் உண்ர்ச்சி விஞ்சிக் கவிபாடும் திறமும் உள்ள அம்மையார் இப்போது தம் எண்ணத்தைப் பாட்டாக வடிக்கிறார்.

பண்டமரர் அஞ்சப் படுகடலின் நஞ்சுண்டு
கண்டம் கறுத்ததும் அன்றியே—உண்டு
பணியுறுவார் செஞ்சடைமேல் பால்மதியின் உள்ளே
மணிமறுவாய்த் தோன்றும் வடு.

[பழங்காலத்தில் தேவர்கள் அமுதம் வேண்டுமென்று கடைந்தபோது அவர்கள் அஞ்சும்படி பாற்கடலில் தோன்றிய ஆலகால நஞ்சத்தை உண்டு, இறைவனுடைய கண்டம் கறுப்பு நிறத்தை அடைந்ததும் அல்லாமல், பாம்புகள் இருக்கும் நீண்ட செம்மையான சடையின்மேல்