பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/371

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57. நிலாச் சூடும் காரணம்


சிவபெருமானுடைய திருக்கோலமும் அவன் அணிந்துள்ள பொருள்களும் அவன் செயல்களும் விசித்திரமானவை. மற்ற மூர்த்திகளின் போக்கு வேறு, அவனுடைய போக்கு வேறு. எல்லாரும் பட்டும் பீதாம்பரமும் உடுத்திருப்ப அவன் புலித் தோலையும் யானைத் தோலையும் புனைந்திருக்கிறான். எல்லோரும் மணமும் அழகும் உள்ள மலர்களை அணிந்திருக்க அவன் எருக்கும் தும்பையும் கொன்றையும் அணிகிறான். பிறர் மணியாலும் பொன்னாலும் அமைந்த அணிகளை அணிய அவன் எலும்பையும் பாம்பையும் ஆபரணங்களாகக் கொண்டுள்ளான். யாவரும் சந்தனம் பூச அவன் சுடுநீறு பூசியுள்ளான். எல்லோருடைய கண்களும் உரிய இடங்களில் இருக்க அவ்னுக்கு மூன்றாவது கண் ஒன்று நெற்றியிலே குறுக்காக இருக்கிறது. “கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை” என்று மாணிக்கவாசகர் பாடுகிறார்.

அவன் ஊரூராகச் சென்று பிச்சை எடுத்து உண்ணுகிறான். பிச்சைப் பாத்திரமாவது நன்றாக இருக்கிறதா? வெண்தலை என்று சொல்லும் கபாலத்தில் பிச்சை வாங்கி உண்கிறான். இப்படி இருக்கிறவனை மற்றவர்கள் கண்டால் இழிவாகப் பேச மாட்டார்களா? ஒருகால் அவனுக்குப் பயந்து கொண்டு அவன் முகத்துக்கு எதிரே இழிவாகப் பேசாவிட்டாலும், அவன் போன பிறகு இழித்து எள்ளி நகையாடுவார்கள்; புறம் பேசுவார்கள்.

எம்பெருமான் ஏன் இப்படிச் செய்கிறான்? இப்படிப் புலால் நாற்றம் வீசும் கபாலத்தில் பிச்சை வாங்கி உண்பது அவனுக்குப் பெரிய வடுவல்லவா? பிச்சை