பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

366

எடுப்பதே முதலில் அவமானம். அதுவும் கபாலத்தைப் பிட்சாபாத்திரமாகக் கொண்டது அதை விட அவமானம். அந்தக் கபாலமாவது சுத்தமாக இருக்கிறதா? இன்னும் புலால் நாற்றம் வீசுகிறது. அதில் பிச்சையெடுப்பது மிக மிக வடுவான செயல். சைவ உணவு என்றாலே ஊன் இல்லாத உணவைக் குறிக்கும். அப்படியிருக்கச் சிவபெருமானே ஊன் நாற்றம் வீசும் பாத்திரத்தில் பிச்சை வாங்குவது எவ்வளவு இழிவு? கலம் தூய்மையாக இல்லாவிட்டால் அதில் இடும் உணவும் தூய்மையில்லாமல் போகுமே!

சிவபெருமான் கபாலியாகத் திரிந்து பிச்சையெடுத்து உண்பதைப் பலரும் பழிப்பது அவனுக்குத் தெரியாதா? அவன் அவ்வாறு செய்வதை வடு என்று கருதவில்லையா?

இப்படியெல்லாம் காரைக்காலம்மையார் யோசித்துப் பார்க்கிறார். அவரே யோசிக்கும்போது நமக்கு அந்த யோசனை எழாதா? இறைவன் பிரமனுடைய கபாலத்தில் பிச்சை ஏற்கிறான். பிரமனுக்கு முன்பு ஐந்து தலைகள் இருந்தன. சிவபெருமானுக்கும் ஐந்து சிரங்கள். பிரமன், ‘எனக்கும் ஐந்து தலை; சிவனுக்கும் ஐந்து தலை; இருவரும் சமானம்’ என்று தருக்குக் கொண்டான். பெரிய உத்தியோகம் வகிக்கிறவர்கள் நல்ல பண்போடு இருந்தால்தான் அவர்கள் வேலை நன்றாக நடக்கும். தமக்கு மேலதிகாரிகள் இருக்கிறார்கள் என்ற எண்ணம் இன்றித் தான்றோன்றித் தம்பிரான்களாக இருந்தால் அவர்களால் மற்றவர்களுக்குத் தீங்கு உண்டாவது மாத்திரம் அன்று; அவர்களுக்கே தண்டனை கிடைக்கும்.

படைப்புத் தொழில் என்பது மிகவும் கெளரவமான செயல்; பொறுப்பு மிக்க தொழில். அதைப் புரிபவர்கள் ஒழுங்காகச் செய்ய வேண்டும். தமக்கு மேல் தலைவர்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து, பணிவாக வேலையைச் செய்து வரவேண்டும். அப்படியின்றிக் கர்வம் உண்டாகிவிட்டால் முறைபிறழ்ந்து நடக்கும்படி ஆகிவிடும்.