பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/373

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

367

பிரமன் கர்வம் கொண்டான். மேலதிகாரியை மதிக்காத தருக்கு அவனிடம் உண்டாயிற்று. அப்போது 'இறைவன் அவனுக்குத் தண்டனை கொடுத்தான். ஐந்தாவது தலையைக் கிள்ளிய தலையின் கபாலத்தையே பிட்சாபாத்திரமாக ஆக்கிக் கொண்டான். ஊனெல்லாம் கரைந்து வெள்ளை வெளேரென்று இருக்கும் மண்டையோடு அது. துறவிகள் பிட்சை வாங்க மண் ஒடு வைத்திருப்பார்கள். அதுபோலச் சிவபெருமான் மண்டையோடு வைத்திருக்கிறான். அதைத்தான் கபாலம் என்றும் வெண்டலை என்றும் சொல்வார்கள்.

சிவபிரான் பிரமனிடமிருந்து பட்டுப் போன தலையில் பிச்சை எடுக்கிறான்; “படுவெண் தலையினுள் ஊண்” ஏற்கிறான். அப்படிச் செய்வது எதற்காக?

ஆணவத்தின் பகுதிதான் கர்வம். அதை உடையவர்கள் துன்பம் அடைவார்கள் என்பதைக் காடடவே அதைக் கையில் வைத்திருக்கிறான். கர்வம் அடைந்தவர்கள் எவ்வளவு பெரியவர்களானாலும் அவர்களுக்கு நிச்சயமாகத் தண்டனை உண்டு.

அது மட்டும் அல்ல. அவன் கபாலத்தை ஏந்திக்கொண்டு ஊர்தோறும் பிச்சைக்குப் போகிறான். உலகம் முழுவதும் திரிகிறான். “நீ உலகம் எல்லாம் இரப்பினும்” என்று அடுத்தபடி சொல்லப் போகிறார் அம்மையார்.

அவ்வாறு அவன் கபாலத்தை ஏந்திக்கொண்டு போகும்போது அவன் பெருமையை உணராதவர்கள் பழி கூறுவார்கள். அதைப்பற்றி அவன் கவலைப்படுவதில்லை. அன்பர்களோ உண்மையை உணர்ந்து உருகுவார்கள். அவன் பிச்சை வாங்குவதாகப் பேர் பண்ணிக் கொண்டு அன்பர்களுக்கு அருட்பிச்சை அளிக்கப் போகிறான். என்னை நம்பினவர்களுக்குப் பிறப்பு இல்லை என்பதை அந்தக் கபாலத்தால் உணர்த்துகிறான். பிரமன் எல்லோருடைய மண்டையோட்டிலும் எழுதுகிறான்