பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/376

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

370

கையில் கபாலமும் தலையில் நிலாத்துண்டமும் உள்ளதை எண்ணி, இரண்டுக்கும் முடிச்சுப் போட்டு இப்படி ஒரு கற்பனையை அமைத்து அதையே கேள்வியாகக் கேட்கிறார் அம்மையார்.

வடுஅன்று எனக்கருதி நீமதித்தி ஆயின்
சுடுவெண் பொடிநிறத்தாய், சொல்லாய்—படுவெண்
புலாவதலையி னுள்ஊண் புறம்பேசக் கேட்டோ
நிலாத்தலையில் சூடுவாய் நீ?

[சுட்ட வெண்மையான திருநீற்றின் நிறத்தை உடைய திருமேனிப் பெருமானே! உயிரின்றிப் பட்டுப்போன புலால் நாற்றம் கமழும் கபாலத்தினுள் பிச்சையுணவைப் பெறுவதைப் பழியன்று என எண்ணி நீ அதைச் சிறப்பாக எண்ணினையாயினும், மற்றவர்கள் புறத்தே பழிகூறுவதைக் கேட்டோ நிலாவையுடைய சந்திரனை நீ தலையில் சூடிக்கொண்டிருக்கிறாய்? நீ அதன் காரணத்தைச் சொல்.

வடு—பழி. மதித்தி-உயர்வாக எண்ணினாய். ஆயின்—ஆயினும்; உம்மை தொக்கது. சுடுபொடி, வெண்பொடி எனக் கூட்டுக. திருநீற்றால் இறைவனுடைய திருமேனி வெள்ளையாகத் தோன்றுகிறது. நிறம்-மார்பு என்று கொண்டு வெண்ணீற்றையணியும் மார்பையுடையவனே என்றும் பொருள் கொள்ளலாம். படு-உயிரின்றி விழுந்த; படுத்த என்றும் கொள்ளலாம்; வீழ்த்திய என்று பொருள். ஊண்—உணவுப் பொருள். புறம் பேச-புறத்தே இழிவாகப் பேச.]

நீ அதை வடுவாக மதிக்காவிட்டாலும் மற்றவர் கூறும் பழியைக் கேட்டு அதை மாற்ற, அவர்கள் உண்மையறிந்துகொள்ளும்படி நிலாவைச் சூடினாயோ என்று கேட்கிறார்.

இது அற்புதத்திருவந்தாதியில் 56-ஆம் பாட்டு.