பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/377

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58. பலியிடார்


இறைவன் பிட்சாடனனாகச் செல்லும் செயலைக் காரைக்காலம்மையார் பின்னும் நினைத்துப் பார்க்கிறார். பிச்சைக்காரன் ஆனாலும், துறவியானாலும் அவர்களுக்கு வேண்டியதை இடுபவர்கள் பெண்மணிகளே. இதனால்தான் பிச்சைக்காரன், “அம்மா! பிச்சை” என்று கேட்கிறானேயன்றி, “ஐயா! பிச்சை” என்று கேட்பதில்லை. வீட்டுக்கு வெளியே வரும் பிச்சைக்காரர்களுக்கு ஐயமும் வீட்டுக்குள்ளே வரும் விருந்தினர்களுக்கு விருந்தும் இடும் கடமையை உடையவர்கள் மகளிர். “ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி” என்று பெண்கள் பாடுவதாகத்தானே திருப்பாவையில் வருகிறது?

சிவபெருமான் பிட்சை வாங்கச் செல்கிறான். அவனுக்குப் பிட்சையிடப் பெண்களே வரவேண்டும். தாருகாவனத்து முனிவர்களின் பத்தினிகள் பிட்சையிட்டதாகப் புராணம் சொல்கிறது.

காரைக்காலம்மையார் இறைவனுக்கு மடவார் பிச்சையிடுவார்கள் என்பதை இப்போது நினைத்துப் பார்க்கிறார்.

பிச்சை வாங்குகிறவர்கள் சாந்தமாகப் போய்ப் பிச்சை கேட்டால் பெண்கள் மகிழ்ந்து பிச்சை இடுவார்கள். சிவபெருமான் எப்படிப் போகிறான்? என்பு மாலையும் புன்சடையும் கொண்டு பிச்சை கேட்கப் போகிறான். கையில் கபாலத்தை ஏந்தியிருக்கிறான். பெண்கள் பயந்த சுபாவம் உடையவர்கள்; மெல்லியலார். அவர்கள் இந்தத் தோற்றங்களைக் கண்டால் அஞ்சுவார்கள். கபாலமும்