பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/380

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

374

அஞ்சிப் பிச்சையிடாமல் போய்விடுவார்கள். அந்த அச்சத்துக்கு உரிய காரணம் எதுவோ அதை மாற்ற வேண்டும். நாகப்பாம்பைக் கழற்றி விட்டுச் செல்ல வேண்டும் என்கிறார் அம்மையார்.

நீ உலகம் எல்லாம் இரப்பினும், நின்னுடைய தீய
அரவுஒழியச் செய்கண்டாய்—தூய
மடவரலார் வந்து பலிஇடார், அஞ்சி,
விடஅரவம் மேல்ஆட மிக்கு.

[இறைவனே, நீ உல்கம் எல்லாம் தெரிந்து பிச்சையெடுத்தாலும் குற்றம் இல்லை; நீ ஆபரணமாகப் பூண்டிருக்கும் நின்னுடைய தீங்கைப் பயக்கும் கெட்ட பாம்பு ஒழிந்து நிற்கப் போவாயாக; ஏனென்றால், உனக்குப் பிச்சையிடும் தூய மனம் உள்ள பெண்கள் விடம் பொருந்திய பாம்பு உன்மேலே மிகவும் ஆட, அதைக் கண்டு அஞ்சி உன் அருகில் வந்து பிச்சை போட மாட்டார்கள்.

இரப்பினும் என்பதில் உள்ள உம்மை இழிவு சிறப்பும்மை; இரப்பது கூடாது என்ற குறிப்பை உடையது. தீய அரவு—மரணத்தை உண்டாக்கும் பாம்பு. ஒழிய—விட்டு நிற்க; அது இல்லாமல் என்றபடி. தூய—உள்ளம் தூய. மடவரலார்—மடப்பத்தையுடைய பெண்கள். பலி—பிச்சை. விட அரவம் மிக்கு மேல் ஆட மடவரலார் அஞ்சி, வந்து பலியிடார் என்று கூட்டிப் பொருள் செய்க.]

இறைவனிடம் நெருங்கி உரிமையோடு பாடுகிறார் அம்மையார்.

இது அற்புதத் திருவந்தாதியில் 57-ஆவது பாட்டு.