பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/381

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



59. சடையும் குழலும்


சிவபெருமான் தனக்குள் அம்பிகையை அடக்கித் தான் ஒருவனாகவே காட்சி கொடுக்கும் கோலமும் உண்டு; அன்னையை இடப் பாதியில் அமைத்து இரண்டுருவம் ஒன்றாக இணைந்து அர்த்த நாரீசத் திருக்கோலத்தில் விளங்குவதும் உண்டு; தனியே அம்பிகையை அமரவைத்து இடபத்தின்மேல் ஊர்ந்து வரும் இடபாரூடர் என்ற திருக்கோலமும் அவனிடம் உண்டு; இவற்றிற்குமேல் இடையிலே கந்தவேளை இருத்திக்கொண்டு இருபுறமும் அம்மையப்பனாக எழுந்தருளும் கோலம் ஒன்று உண்டு; அந்தத் திருக்கோலத்தில் இறைவனைச் சோமாஸ்கந்தர் என்று சொல்வார்கள். ஒன்றை அடக்கிய இருப்பதாகிய ஒன்று, தனிவேறு இரண்டு, மூன்று என்று வடிவங்களைக் காட்டும் மூர்த்திபேதங்கள் இவை.

“பெண் உரு ஒருதிறன் ஆகின்று அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்”

என்று புறநானூற்றில் வருகிறது. அர்த்தநாரீசத் திருவுருவத்தையும் இறைவியை உள்ளடக்கிய தனிக் கோலத்தையும் அந்த அடிகள் குறிக்கின்றன.

இவற்றில் அர்த்தநாரீசக் கோலத்தை மாதிருக்கும் பாதியன் என்று மணிவாசகர் பாடுவார். திருச்செங்கோட்டில் அந்த மூர்த்தி எழுந்தருளியிருக்கிறார்.

“நீல மேனி வாலிழை பாகத்து ஒருவன்”

என்று சங்க நூலாகிய ஐங்குறுநூறு இத் திருவுருவத்தைச் சுட்டிச் சொல்கிறது.