பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/383

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

377

முழங்கி எரியும் போது தோன்றும் சுடர்க் கொழுந்து போல இருக்கும்.

இறைவன் திருச்சடை நெருப்புக் கொழுந்து போலத் தோன்றுவதைக் கண்ட அம்மையார் இடப்பாகத்தைப் பார்க்கிறார். அர்த்தநாரீசக் கோலத்தில் அல்லவா இப்போது இவர் அகக்கண் பதிந்திருக்கிறது. அதில் வலப்பாகத்து முடியைப் பார்க்கையில் அங்கே எரியும் கொழுந்து போலச் சடை தெரிகிறது. உடனே வாமபாகத்தைப் பார்க்கிறார். அங்கே ஒரு பாதியாக அம்பிகை இணைந்திருக்கிறாள்.

அந்த இடப்பக்கத்துத் திருமுடியைப் பார்க்கிறார். அம்பிகையின் கூந்தல் கன்னங்கரியது. இருளெல்லாம் செறிந்து ததும்பி நின்றது போல அந்தக் கூந்தல் தோற்றம் அளிக்கிறது. இறைவியின் கூந்தலுக்கு மேகத்தை உவமை சொல்லலாம்; பாசியை உவமிக்கலாம்? மயில்தோகையை உவமையாக்கலாம்; மையைச் சொல்லலாம். ஆனால் அம்மையாருக்கு அந்த உவமைகள் நினைவில் வரவில்லை; செக்கச் செவேல் என்ற சடையும் கன்னங்கரேல் என்ற குழலும் ஒன்றுக்கு ஒன்று நேர்மாறான வண்ணம் உடையவை. நெருப்புக் கொழுந்தைச் சொன்னவர் அதனோடு தொடர்ந்து நினைவுக்கு வரும் இருட்டை உவமை யாக்குகிறார். நள்ளிருளில் ஈமத்தில் அழல் கொழுந்து விட்டு எரியும் போது கூத்தாடும் ஐயனை வணங்குகிற அவருக்கு எரியும் இருளும் அடுத்தடுத்தே நினைவுக்கு வருகின்றன. அவரே நள்ளிருளில் இறைவனோடு கூத்தாடும் பேய்க்கணத்தில் ஒருவராக ஆனவர் அல்லவா?

அம்பிகை குழலினிடையே பூவை அணிந்திருக்கிறாள். அது பூங்குழல். இருட்டிலே நட்சத்திரம் ஒளிர்வதைப் போல அது ஒளிர்கிறது.

இறைவனுடைய திருச்சடையும் அவன் பாகத்தில் இணைந்திருக்கும் அம்மையின் பூங்குழலும் ஒரு சேரப் பார்த்தால் எப்படி இருக்கின்றன? தீக்கொழுந்தும்