பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/384

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

378

அடர்ந்த இருளும் போல இருக்கின்றன அல்லவா? என்று கேட்கிறார் காரைக்கால் அம்மையார்.

மிக்க முழங்கெரியும் வீங்கிய பொங்கிருளும்
ஒக்க உடன் இருந்தால் ஒவ்வாதே?—செக்கர்போல்
ஆகத்தரன் செஞ்சடையும் ஆங்கு அவன்றன் பொன்உருவில்
பாகத்தான் பூங்குழலும் பண்பு.

அந்திச் செவ்வானத்தைப் போலுள்ள திரு மேனியை உடைய சிவபெருமானுடைய செந்நிறமான சடையும், அங்கே அவனுடைய பொலிவு பெற்ற திருவுருவத்தில் இடப்பாகத்திலுள்ள அம்பிகையின் பூவை அணிந்த கருங்குழலும் தோற்றுவிக்கும் இயல்பு, மிகவும் அதிகமாகப் பொங்கி முழங்கும் நெருப்புக் கொழுந்தும், மிகுதியாக அடர்ந்துள்ள இருளும் ஒருங்கே உடன் இருந்தால் எப்படியோ அப்படி ஒத்திராதோ?

மிக்க எரி, முழங்கு எரி என்று தனித்தனியே கூட்டுக. வீங்கிய—மிகுதியான. பொங்கு—செறிந்து ததும்பும். ஒவ்வாதே. ஒவ்வாதோ; வினா. செக்கர்—அந்திச் செவ்வானம். ஆகம்—திருமேனி. பொன் உரு—பொலிவு பெற்ற வடிவம்; செம்பொன்னைப் போன்ற வடிவம் என்றும் சொல்லலாம்.

பண்பு ஒவ்வாதோ என்று முடிக்க வேண்டும்.

அற்புதத் திருவந்தாதியில் 58-ஆம் பாடல் இது.