பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/385

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60. நீறு அணியும் உருவம்


காரைக்காலம்மையாருக்கு இப்போது ஒரு சந்தேகம் வந்துவிட்டது. இறைவனிடம் அன்பு கொண்டு, தாயாகவும், பக்தராகவும் நெருங்கிப் பேசும் உரிமையைப் பெற்றவர் அவர். அப்படி நெருங்கிப் பார்க்கும்போது இறைவனுடைய திருமேனியைக் கூர்ந்து கவனிக்கிறார். அவன் அணிந்திருக்கும் பொருள்களையெல்லாம் உற்றுப் பார்க்கிறார். அவருடைய கற்பனை ஊறுகிறது. என்ன என்னவோ உவமைகள் தோன்றுகின்றன. முரண்பாடுகள் பல காட்சியளிக்கின்றன. இறைவனைப் பற்றித் திருப்பித் திருப்பி எவற்றைச் சொல்வது? அவனுடைய கருணையையும் பெருமையையும் சொல்லிக் கொண்டே யிருக்கலாம். என்றாலும் இடையே சிறிது மாறுதல் வேண்டாமா? அப்போது தானே சலிப்புத் தட்டாமல் இருக்கும்?

ஆண்டவனை அவ்வப்போது கேள்வியைக் கேட்கிறார். “இப்படியெல்லாம் செய்யப்படாது” என்று அறிவுறுத்துகிறார். “இவ்வாறு செய்ய வேண்டும்” என்று வேண்டிக் கொள்கிறார். அவருக்குத் தோன்றும் ஐயங்களும், எழும்பும் வினாக்களும், ஏதோ கருத்துக்களைத் தெரிந்து கொள்வதற்காக அமைந்தவை அல்ல. இறைவனைப் பற்றியே பேசிப் பொழுது போக்க இவை உதவுகின்றன; வீண் பொழுது போக்காமல் இறைவனை எண்ணுவதற்கு உரிய வாய்ப்பை அளிக்கின்றன; சுவையாகவும் இருக்கின்றன.

உணவிலே ஒரே கறியைப் பல வகையாகச் சமைத்து உண்பதில் தானே சுவை அதிகமாக உண்டாகிறது?