பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/386

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

380

அப்படி ஆண்டவன் தோற்றத்தையும் இயல்புகளையும் தொடர்பு படுத்திப் பல பல வகையில் பாடுகிறார் காரைக்காலம்மையார்.

இறைவனுடைய நெற்றியைப் பார்க்கிறார். அவனுடைய தனிச் சிறப்பைக் காட்டும் அடையாளத்தை அங்கே பார்க்கிறார். வேறு யாருக்கும், அதாவது அந்தக் குடும்பத்தினர் அல்லாத வேறு யாருக்கும், அந்த அடையாளம் இல்லை. அதுதான் ஞானக் கண்ணாகிய நெற்றிக்கண். ‘இமையாத முக்கண் மூவரிற் பெற்றவன்’ அவன். அக்கினியே நெற்றிக் கண்ணாக இருக்கிறது. அக்கினிக்கு ஒளி விடும் தன்மையும் எரிக்கும் இயல்பும் உள்ளன. இறைவனுடைய நெற்றிக் கண்ணுக்கு ஞான ஒளி வீசும் இறப்பும், அஞ்ஞானத்தையும் ஆசையையும் அழிக்கும் திறமையும் உண்டு. ஞான ஒளி வீசும் தன்மை இருப்பதால், ஞானமே வடிவமாகிய குமாரன் அந்தக் கண்ணிலிருந்து தோன்றினான். தீயவற்றை அழிக்கும் ஆற்றலால் மாரனை அது எரித்தது. குமார ஜனனமும் மாரவதமும் அந்தக் கண்ணின் இரண்டு வகை ஆற்றலினாலும் விளைந்த விளைவுகள்.

இறைவனிடம் உள்ள மற்றொரு சிறப்பான அடையாளம் அவனுடைய நீலகண்டம். அதை நினைப்பதில் அம்மையாருக்கு ஆர்வம் மிகுதி. அந்தக் கண்டம், இறைவன் எதனாலும் அழியாத நித்தியன் என்பதையும் விளக்கிக் கொண்டிருக்கிறது. “விண்ணோர் அமுதுண்டும். சாவ ஒருவரும், உண்ணாத நஞ்சுஉண்டு இருந்து அருள் செய்குவாய்” என்று இளங்கோவடிகள் பாடுகிறார். ‘நம்மை அழித்து விடுமே’ என்று அஞ்சித் தேவர் யாரும் அதன் பக்கத்திலே போவதில்லை. இறைவன் அதை அநாயாசமாக உண்டு, அதனால் அழிவோ மயக்கமோ இல்லாமல், நிச்சலனாக இருக்கிறான். இது அவனுடைய நித்தியத்துவத்தைக் காட்டுகிறது. அந்த நஞ்சை உண்டதனால் அப்போதைக்குத் தேவர்கள்