பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/387

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

381

இறந்து படாமல் இருந்தனர்; தாம் விரும்பிய அமுதத்தை நுகரும் பேறு அவர்களுக்கு ஏற்பட்டது. இது சிவபெருமானுடைய கருணையைக் காட்டுகிறது.

இவ்வாறு அமைந்த இரண்டு அடையாளங்களையும் எண்ணி, ஆண்டவனை விளிக்கிறார் அம்மையார்.

“கண் புணரும் நெற்றிக் கறைக் கண்டா; உன்னைப் பற்றி முழுவதும் தெரிந்து கொள்ளுவன் நான்.”

யாரால்தான் தெரிந்து கொள்ள முடியும்? மற்றவர்கள் உன் இயல்புகளைப் பற்றிய ஐயப்பாடு எழுந்தால் அதைப் போக்கும் வழி தெரியாமல் திண்டாடுகிறார்கள். வேறு யாரிடமாவது கேட்டுத் தெளியலாம் என்றால், அவர்களும் தம் ஐயங்களுக்கு விடை கிடைக்காமல் தடுமாறுகிறவர்க்ள். இரண்டு நாள் பட்டினிக்காரன் மூன்று நாள் பட்டினிக்காரனிடம் போய்ப் பசியைத் திர்த்துக் கொள்ள முடியுமா?

அம்மையாருக்கு அந்தச் சங்கடம் இல்லை. யாரைப் பற்றி அவருக்கு ஐயம் எழுகிறதோ, அவனை அணுகும் பக்குவமும், கேட்கும் உரிமையும் உடையவர். சாட்சிக்காரன் காலில் விழுவதைவிடச் சண்டைக்காரன் காலில் விழுவது மேல் அல்லவா?

ஆகவே இறைவனிடமே கேட்கப் புகுகிறார்.

"நான் எத்தனை ஆராய்ந்து பார்த்தாலும் என் அறிவுக்கு இந்த விஷயம் புலப்படவில்லை. உன் பண்பு முற்றும் உணரும் ஆற்றல் இல்லாதவள். நான். ஆகையால் உன்னையே கேட்கிறேன். எனக்கு வேண்டிய் தெளிவை நீயே பணித்தருள வேண்டும்' என்று தொடங்குகிறார்.