பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/389

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

383

நீறு இருக்குமா? மாலிருக்கும் பாதியனாக இருந்தால் அப்பொழுதும் உடம்பு முழுதும் திருநீறு விளங்குமா? இப்படி ஓர் ஐயப்பாடு அம்மையாருக்குத் தோன்றுகிறது.

‘உன்னுடைய திருவுருவங்களுக்குள் பெண் புணரும் அந்த உருவம் நீறு அணியுமா? மாலோடு இணைந்திருக்கும் போது மாலிருக்கும் பகுதியும் நீறு அணியுமா?’ என்ற ஐயம் எழுகிறது. எனக்கு உன் இயல்பை, பண்பை உணர முடியாது; நீதான் எனக்கு விளக்க வேண்டும்; பணித்தருள வேண்டும்' என்கிறார். உமாதேவியும் திருமாலும் திருமேனி முழுதும் நீறு அணிவதில்லை. அது தெரிந்தும் அறியாதவரைப் போலக் கேட்கிறார். அம்பிகை நுதலில் நீறணிவாள்; திருமாலும் நெற்றியில் நேரே நீற்றை அணிவதுண்டு; “கரிய மேனிமிசை வெளிய நீறு சிறிதேயிடும்” என்று திவ்யப்பிரபந்தத்தில் வருகிறது. இப்படிச் சிறிதளவு திருநீற்றை அணிந்தாலும், மேனி முழுவதும் அணிவதில்லை என்றாலும், ஐயம் கொண்டவரைப் போல, "அம்பிகையின் பகுதியிலா, திருமாலின் பகுதியிலா எங்கே நீறு இருக்கும்? நீறு அணிவது எவ்வுருவோ?’ என்று கேட்கிறார் அம்மையார்.

பண்புணர மாட்டாதேன்; நீயே பணித்துக்காண்;
கண்புணரும் நெற்றிக் கறைக்கண்டா—பெண்புணரும்
அவ்வுருவோ, மாலுருவோ, ஆன்ஏற்றாய் நீறு அணிவது
எவ்வுருவோ நின்உருவ மேல்.

[கண் சேர்ந்த நெற்றியையும் நஞ்சுக் கறுப்பையுடைய கண்டத்தையும் கொண்ட எம்பெருமானே, இடபவாகனத்தை உடையானே, உன்னுடைய இயல்பு முழுவதையும் உணரும் ஆற்றல் இல்லாதவன் யான்; ஆதலால், நீயே என் ஐயம் நீங்கப் பணித்தருள வேண்டும். நின்னுடைய பல வகைத் திருக்கோலங்களுக்குள் உமாதேவியாகிய பெண்ணின் நல்லாள் சேர்ந்த அந்தத் திரு