பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/391

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61. பொன்மலை


சிவபெருமான் வீரர்களுக்குள் பெருவீரன்; அடியவர்களுடைய ஆணவத்தைப் போக்கக் கங்கணம் கட்டிக் கொண்டவன். அஞ்ஞான இருளை நீக்கும் ஞானசூரியன், காலபயத்தை நீக்கி மரணமில்லாப் பெருவாழ்வை அருளும் காலகாலன். அவனுடைய பராக்கிரமச் செயல்களைப் புராணங்கள் பலபடியாக விரித்துக் கூறுகின்றன.

பராக்கிரமச் செயல்கள் என்றும், கருணைச் செயல்கள் என்றும் அவனுடைய திருவிளையாடல்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். தீய சக்திகளை ஒடுக்கும் செயல்கள் வீர விளையாடல்கள்; அவை அவனுடைய வீரத்தைக் காட்டுபவை. அடியார்களுக்கு அருள்புரியும் திருவிளையாடல்கள் பல. அவை அவனுடைய கருணையைக் காட்டுபவை. வீரமும் ஈரமும் ஒருங்கே அமைந்த அப்பெருமானிடம் அம்பிகை இணைந்திருக்கிறாள். வீரம் அவன் திருவுருவம் ஆனால் ஈரம் அவள் திருவுருவம்.

வீரம் தோன்ற அவன் செய்த வீர விளையாடல் பல ஆனாலும் அவற்றுள் எட்டைச் சிறப்பாக எடுத்துச் சொல்வார்கள். அந்த எட்டுச் செயல்களையும் நினைப்பூட்டும் தலங்கள் எட்டு தமிழ்நாட்டில் உள்ளன. அவை அவனது வீரத்தைக் காட்டும் தலங்கள்; வீரஸ்தானங்கள். மூலஸ்தானம் என்பது மூலட்டானம் என்று வரும். அவ்வாறே வீரஸ்தானம் என்பது வீரட்டானம் என்று தமிழில் வழங்கும். எட்டு வீரட்டானங்கள் உண்டு. அவற்றை அட்ட வீரட்டம் என்றும் சொல்வது வழக்கம்.

நா—25