பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/393

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

387

மேனியை உடையவ்ர்கள் இறைவனோ தேவர்களுக்கெல்லாம் பெரிய தேவனாகிய மகாதேவன். அவனுடைய திருமேனி கோடி சூரியப் பிரகாசம் உடையது. சோதி வடிவினன் அல்லவா?

பொன்மேனியின் ஒளி கண்ணக் கூசச் செய்கிறது. சூரியனைப் பார்க்கும்போது கண் கூசும். அத்ற்காகப் புகைபடிந்த கண்ணாடியை வைத்துக் கொண்டு அவனைப் பார்ப்பார்கள். சூரியகிரகணம் உண்டாகும் போது இவ்வாறு பார்ப்பது வழக்கம்.

சுடர் வீசும் இறைவனுடைய பொன்மேனியைக் காண வேணுமானால் அடியார்கள் புகைபிடித்த கண்ணாடியைக் கொண்டு பார்க்கவேண்டும். அவ்வாறு ஒரு கண்ணாடியைத் தேடி அலையாமல் இறைவனே ஒரு காரியத்தைச் செய்கிறானாம். மேலே கரிய போர்வை ஒன்றைப் போர்த்துக்கொண்டு நிற்கிறான். அந்தப் போர்வை அவன் திருமேனி ஒளியை மட்டுப்படுத்துகிறது.

உலகத்தோருக்குத் தீங்கு புரிந்த கஜாசுரன் அஞ்ஞானம் உடையவன்; மதிமயக்கம் உடையவன்; மதம்பிடித்த யானையாக வந்தான்; தன் துதிக்கையை வீசிக்கொண்டு கண்டவர் யாவரும் அஞ்சும்படி வந்தான். யானைக்குத் துதிக்கையில் பலம். அதனால் அதைக் கையையுடைய விலங்கு என்று அடையாளம் காட்டுவார்கள். ‘கைம்மா' என்பார்கள். கஜாசுரன் மதம் பிடித்த ஆண்யானை.

அதைக் கொன்று அதன் கரிய தோலை இறைவன் போர்த்துக்கொண்டான். அகங்காரத்தை அழிப்பவன் தான் என்பதை யாவரும் உணர்ந்து, அதைப் போக்கிக் கொள்ள விரும்பும் அடியார்கள் தன்னை வணங்கி அருள் பெறட்டும் என்ற திருவுள்ளத்தோடு அவன் அந்தக் கோலத்தில் நிற்கிறான்.