பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/397

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



62. எந்த உருவம்?


இறைவன் அருவமாய் இருப்பவன். இயல்பாகவே குறியும் குணமும் இல்லாதவன்; மனத்துக்கும் வாக்குக்கும் பொறிகளுக்கும் எட்டாதவன். அணுக்குள் அணுவாக இருப்பவன்; நுட்பத்திலும் நுட்பமாக இருப்பவன். ஆனாலும் மனம் உடைய மக்களுக்கு அருள்புரிவதற்காக வடிவங்களை எடுத்து வருகிறான்.

(காற்று வடிவில் இருக்கும் நிலையில் தண்ணீர் கண்ணுக்குத் தெரியாது. பிராணவாயு ஒரு பங்கும் ஜலவாயு இரண்டு பங்கும் சேர்ந்தால் நீர் ஆகும். அந்த வாயுக்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை. அவை இரண்டும் கலந்தால் மேகமாகி பிறகு தண்ணீர் ஆகின்றன. நீர் மழையாகப் பெய்கிறது; அருவியாக விழுகிறது; பிறகு நிலத்தில் ஆறாக ஒடுகிறது. அதைக் காணலாம்; அதில் ஆடலாம்; குடிக்கலாம்.)

தண்ணிருக்கு உருவம் (form) உண்டு; ஆனால் வடிவம் இல்லை. கண்ணிலே காண்பதனால் உருவம் உண்டு. உருண்டை, தட்டை என்பது போன்ற பரிமாணம் இல்லாமையால் வடிவம் (shape) இல்லை. ஆனால் தண்ணீரைக் குடத்தில் எடுத்து வைத்தால் குடத்தின் வடிவத்தைப் பெறுகிறது; செம்பில் எடுத்து வைத்தால் செம்பின் வடிவத்தை உடையதாகிறது. பாத்திரத்திற்கு ஏற்ற வடிவத்தைப் பெறுகிறது.