பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/398

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



392

இறைவனும் சர்வசூட்சுமமாக இருக்கிறான். கருணையினால் கண்ணால் காணும் ஜோதியாக வருகிறான். பிறகு, திருமேனியும் உறுப்புக்களும் படைத்த மூர்த்திகளாக எழுந்தருளுகிறான்; அன்பர்களின் உள்ளத்தில் அத்தகைய வடிவங்களுடன் காட்சி அளிக்கிறான். அவர்கள் அருட் கண்ணால் அந்த வடிவங்களைப் பார்க்கிறர்கள்.

“அவன்அருளே கண்ணாகக் காணின் அல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்
இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொ ணாதே”

என்றும்,

“அருட்கண்ணால் நோக்காதார் அல்லா தாரே”

என்றும் அப்பர் சுவாமிகள் பாடுவார்.

அவ்வாறு இறைவனுடைய திவ்ய தரிசனத்தை அருட் கண்ணால் தரிசித்த பெரியவர்கள் புறக்கண்ணிலும் காணுகிறார்கள்.

"திருக்கண்டேன்; பொன்மேனி கண்டேன்; திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன்”

என்று பெருமிதம் கொள்கிருர்கள்.

எல்லாரும் அப்படிப் பார்க்க முடியுமா? அதற்குரிய பக்குவம் யாருக்கும் இருப்பதில்லையே! இதை உணர்ந்த அருளாளர்கள் தாம் கண்டதைச் சொல்கிறார்கள். சொல்லால் வடித்த அந்த வடிவத்தைக் கல்லாலும் செம்பாலும் வடித்துத் தரிசிக்கும்படி செய்கிறார்கள். நேரே பார்க்க முடியாமல் நெடுந்தூரத்தில் உள்ள ஒருவருடைய வடிவத்தைப் படத்திலும் போட்டோவிலும் கண்டுகளிப்பவர்களைப் போல எல்லா மக்களும் இறைவனையும் பல்வேறு வடிவங்களில் கண்டு அன்பு செய்ய முடிகிறது.