பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/405

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

399

இத்தகையது என்று சொல்ல முடியாதது போல இந்த வேட்டுவக் கோலத்தையும் எவ்வாறு இருக்கும் என்று சொல்ல முடியாது. காரணம், அது பண்டைப் பழங்காலத்தில் நிகழ்ந்தமையே. இதைப்பற்றிக் காரைக்கால் அம்மையார் சிந்திக்கின்றார்.

அந்தப் பழங்காலத்தில் வில்லை ஏந்திய வேடத்தை உடையவனாகி இறைவன் விஜயனுடன் போரிட்டான். அந்த வடிவம் அவனாக வலிந்து மேற்கொண்ட வடிவம். அருச்சுனன் அவ்வாறு வரவேண்டும் என்று பிரார்த்திக்கவில்லை. வேறு யாரும் அவ்வாறு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளவில்லை. இறைவனே விஜயனிடம் உள்ள கருணையினால் அந்தத் திருவிளையாடலை நிகழ்த்தனான். தன்னுடைய குழந்தையுடன் சண்டை போடுவது போலத் தந்தை விளையாடி, அந்தக் குழந்தையின் கையால் அடிபடுகின்றான். அதனால் தந்தைக்குக் கோபம் வருமா?. அவன் வேண்டுமென்றே அப்படி விளையாடி அடிபட்டான். அதனால் தந்தைக்கு இன்பம் உண்டாகுமேயொழியக் கோபம் உண்டாகாது. அதுபோல இறைவனுக்கு இந்தத் திருவிளையாடலால் இன்பமே உண்டாயிற்று. அதனால் இறைவன் அருச்சுனனுக்கு அருள்புரிந்தான்.

பண்டைக் காலத்தில் வில்லையுடைய வேடனாகி விஜயனுடன் போரிட்டான் இறைவன். அப்பொழுது அந்த வேடத்தை மேற்கொண்ட இறைவன் எத்தகைய வடிவுடன் இருந்தான்? இப்படி அம்மையார் சிந்திக்கின்றார். அந்தக் கோலத்துக்கு வேறு யாரை உவமை சொல்ல முடியும்? எண்ணி எண்ணிப் பார்க்கின்றார். கற்பனையை விரித்துப் பார்க்கின்றார்; ஊகித்துப் பார்க்கின்றார்.

—பூதப்பால்
வில் வேடன் ஆகி விசயனேடு ஏற்ற நாள்
வல்வேடன் ஆன வடிவு