பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/407

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

401

சொல்லலாகாது. மிக உயர்ந்த பரம்பொருளாகிய அவனுக்கு உவமானம் சொல்வது என்பது முடிகிற காரியமா? ஆகவேதான் அம்மையாரின் உள்ளம் திட்டவட்டமாக இதுதான் ஒப்பு, இதுதான் சொல்லலாகும் என்று தெரியாமல் குழம்புகின்றது.

ஏதுஒக்கும்? ஏது ஒவ்வாது? ஏதுஆகும்? ஏதுஆகாது?

என்று திருப்பித் திருப்பிச் சொல்கின்றார். கடைசியில் உவமை கூறுவதோ, இப்படிச் சொல்லலாம் என்று தீர்மானம் செய்வதோ யாராலும் முடியாது என்ற முடிவிற்கு வருகின்றார்.

ஏதுஒக்கும் என்பதனை யார் அறிவார்?

இவ்வாறு தடுமாறிய தடுமாற்றத்தை அம்மையார் ஒரு பாட்டில் பாடுகின்றார்.

ஏதுஒக்கும்? ஏதுஒவ்வாது? ஏதுஆகும்? ஏது ஆகாது?
ஏதுஒக்கும் எனபதனை யார் அறிவார்? பூதப்பால்
விலவேடன் ஆகி விசயனோடு ஏற்றநாள்
வல்வேடன் ஆன வடிவு.

‘பழங்காலத்தில் வில்லைக்கையில் ஏந்திய வேடனாக வந்து விசயனோடு எதிர்த்துப் போரிட்ட காலத்தில், வலிமையை உடைய வேடத்தை உடையவனான அந்த இறைவன் வடிவத்திற்கு எது ஒப்பாகும்? எது ஒவ்வாது? எது சொல்லத்தகும்? அது சொல்லத் தகாது? எது உவமானம் ஆகும்’ என்பதனை யார் அறிவார்கள்.

பூதம்-இறந்த காலம்; பண்டைக் காலம். வில் வேடன்— வில்லை உடைய வேட்டுவன். விசயன்—அருச்சுனன். ஏற்ற—எதிரிட்டுப் போர் செய்த, வல் வேடன்—வலிமை உள்ள வேடம் பூண்டவன்; வேடன்—வேடத்தை உடையவன்.

‘வடிவு ஏது ஒக்கும் என்பதனை யார் அறிவார்?’

அற்புதத் திருவந்தாதியில் 62-ஆவது பாடல் இது.

நா—28.