பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/409

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

403

இருப்பதில்லை. ஆனால் சிவபெருமானுடைய திருமுடித் திங்கள் அவனுடைய சார்பு பெற்றதனால் தனித்தன்மை உடையதாக இருக்கிறது. அதன் ஒளி எப்படி இருக்கும்?

ஒருகால் அதன் ஒளி கதிரவனுடைய ஒளியை விட மிகுதியாக இருக்குமோ? பகலில் அந்தச் சந்திரன் ஒளி வீசினால் சூரியனுக்கு நிகராக வீசுமோ? இப்படியெல்லாம் அம்மையார் எண்ணிப் பார்க்கிறார்.

இறைவன் சோதிகளுக்கெல்லாம் பெரிய சோதி. அவனை, ‘ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதி’ என்று மாணிக்கவாசகர் பாடுகிறார். அந்தச் சோதியின் முடிமேல் சந்திரன் வீற்றிருக்கிறான். அவனுக்கு அந்தப் பரஞ்சோதியின் சார்பினால் அதிகமான ஒளி கிடைத்திருக்கும். வான சூரியனை விட இறைவனாகிய ஞான சூரியன் எத்தனையோ மடங்கு மிகுதியாக ஒளிவிடும் பரஞ்சுடர். வானத்தில் உலாவும் சந்திரன் வான சூரியனிடம் ஒளி பெற்று விளங்குகிறது. ஆனால் இந்தச் சந்திரனோ அரும்பெருஞ் சோதியாகிய இறைவனுடைய பல்த்தைப் பெற்றிருக்கிறது. ஆகையால் நிச்சயமாக இந்தச் சந்திரனுக்குச் சூரியனைவிட எத்தனையோ ம்டங்கு மிகுதியான ஒளி இருக்கத்தான் வேண்டும்.

ஒருகால் இப்போது வானத்தில் உலவும் கதிரவன் ஏதோ காரணத்தால் ஒருநாள் வரமுடியவில்லை என்று வைத்துக் கொள்வோம். அப்போது இறைவன் முடியில் உள்ள திங்கள் சூரியன் இல்லாத குறையைப் போக்கித் தானே கதிரவனைப் போல ஒளி விடுமோ?

இப்படியெல்லாம் எண்ணம் இட்டார் காரைக்கால் அம்மையார். சும்மா இருக்கும் சமயங்களில் நம்முடைய மனத்தில் எத்தனையோ எண்ணங்கள் தோன்றுகின்றன. எல்லாம் உலகியலோடு சம்பந்தம் உள்ளனவாகவே இருக்கும். சில சமயங்களில் பலவிதமான பைத்தியக்கார எண்ணங்கள் தோன்றும்.